டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடல்நிலை கவலைக்கிடம் – செயற்கை சுவாசம் அளிப்பு

 

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடல்நிலை கவலைக்கிடம் – செயற்கை சுவாசம் அளிப்பு

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு உடல்நிலை மோசமானதை தொடர்ந்து ஆக்சிஜன் ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதுடன்  மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததன் காரணமாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதையடுத்து அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், அவருக்கு ஏற்பட்டுள்ள நுரையீரல் தொற்று தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து ஆக்சிஜன் ஆதரவில் சத்யேந்தர் ஜெயின் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார். முன்னதாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர் குறித்து தனது ட்விட்டர் பதிவில் “நீங்கள் மக்களுக்காக அயராது உழைத்துள்ளீர்கள். இப்போது உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.