வரும் 14 ஆம் தேதி பாஜக அலுவலங்களில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்!

 

வரும் 14 ஆம் தேதி பாஜக அலுவலங்களில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து 14 நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ‘டெல்லி சலோ’ என்ற போராட்டத்தை பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் கடந்த வாரம் வியாழக்கிழமையில் இருந்து நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாது போராட்டத்தை நடத்தும் விவசாயிகள், மத்திய அரசின் பேச்சுவார்த்தைக்கு இணங்கவில்லை. ஐந்து முறை விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும், அதில் உடன்பாடு எட்டவில்லை. அதனால், டெல்லி விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துவருகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று நாடு முழுவதும் போராட்டம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

வரும் 14 ஆம் தேதி பாஜக அலுவலங்களில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்!

இந்நிலையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி வரும் 12ஆம் தேதி டெல்லி – ஜெய்பூர் நெடுஞ்சாலையை முடக்குவதாக டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து 14ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர். மத்திய அரசின் எழுத்துப்பூர்வ பரிந்துரைகளை நிராகரித்து போராட்டம் தொடரும் என்றும், தலைநகருக்குள் நுழைந்து போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து விரைவில் முடிவெடுப்போம் என்றும் விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி எதிர்க்கட்சியை சேர்ந்த ராகுல்காந்தி, சரத்பவார், டி.ராஜா உள்ளிட்ட 5 பேர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசினார். தொடர்ந்து கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சியினர், “குடியரசுத் தலைவரை சந்தித்து வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தினோம். விவசாயிகள் தினமும் நாட்டு மக்களுக்காகவே உழைக்கின்றனர். விவசாயிகளின் நலனுக்காக இந்த சட்டம் என பிரதமர் கூறுகிறார். விவசாயிகள் ஏன் போராடுகின்றனர்? முறையான விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன” எனக் கூறினார்.