போராட்டம் வாபஸ் என வெளியான செய்திக்கு விவசாயிகள் மறுப்பு!

 

போராட்டம் வாபஸ் என வெளியான செய்திக்கு விவசாயிகள் மறுப்பு!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு புதிதாக மூன்று வேளாண் சட்டங்களை கொண்டுவந்தது. இந்நிலையில் நவ.26ஆம் தேதி மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்தனர். டெல்லியின் புராரி மைதானத்தில் மிகாமிட்ட அவர்கள், விவசாயிகளை பாதிக்கும் அந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் நடத்திய போராட்டத்தை, மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளின் கண் துடைப்புக்காக நடத்தப்பட்ட 11 கட்ட பேச்சுவார்த்தையும், தோல்வியிலேயே முடிந்தது. இதனால் வெகுண்டெழுந்த விவசாயிகள் குடியரசு தினமான நேற்று மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தினர். இதில் வன்முறை வெடித்து டெல்லி முழுவதும் கலவர பூமியானது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் விவசாயிகள் கிடையாது என்றும் அவர்கள் கலிஸ்தான் இயக்கத்தினர் என்றும் விவசாயிகள் தரப்பில் சொல்லப்பட்டது.

போராட்டம் வாபஸ் என வெளியான செய்திக்கு விவசாயிகள் மறுப்பு!

இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் வாபஸ் என சமூக வலைதளங்களில் வைரலான செய்திக்கு விவசாய சங்கங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. மாறாக மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப்பெறும் வரை போராட்டம் நீடிக்கும் என்றும் திட்டவட்டமாக விவசாயிகள் தெரிவித்துவிட்டனர். மேலும் பிப்.1-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லும் திட்டத்தை ஒத்திவைக்க விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. நாடு முழுவதும் வரும் 30 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் எனவும் விவசாய சங்கம் அறிவித்துள்ளன.