நீக்கப்பட்ட புத்தகம் மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்ப்பு – அருந்ததி ராய் மகிழ்ச்சி

 

நீக்கப்பட்ட புத்தகம் மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்ப்பு – அருந்ததி ராய் மகிழ்ச்சி

புக்கர் விருது பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய walking with the comrades எனும் நூல் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டமாக இருந்தது. இதற்கு சிலர் அளித்த ஆட்சேபனை கடிதம் கொடுத்த நிலையில் சில வாரங்களுக்கு முன் அது நீக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் இந்த முடிவுக்கு தமிழக எழுத்தாளர்கள் கடும் எதிர்வினையாற்றினார்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக, திமுக எம்பி கனிமொழி பங்கேற்ற இணைய கண்டன கூட்டத்தை நடத்தப்பட்டது.

நீக்கப்பட்ட புத்தகம் மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்ப்பு – அருந்ததி ராய் மகிழ்ச்சி

இன்னும் பல இடங்களிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்படவே, நீக்கப்பட்ட நூலை பாடத்திட்டத்தில் சேர்த்தது மனோன்மணியம் பல்கலைக்கழகம். இதற்கு நன்றி தெரிவித்து தமுஎகச அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிகையில், பல்கலைக்கழக முடிவை கண்டித்து எழுத்தாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கள், கல்வியாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், அறிவுஜீவிகள் குரல் எழுப்பினர். த.மு.எ.க.ச இணைய வழியில் கண்டனக் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றியது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் (மூட்டா) துணைவேந்தரின் போக்கினை எதிர்த்தது.

இந்நிலையில் நவம்பர் 23 அன்று நடந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத் திட்டக்குழு கூட்டத்தில் ‘வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்’ நூல் இந்தக் கல்வியாண்டு பாடத் திட்டத்தில் பாடமாகத் தொடரும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதை த.மு.எ.க.ச வரவேற்கிறது. கல்விப்புலங்களில் வலதுசாரிகளின் அத்துமீறலைத் தடுத்திட இதே போன்ற விழிப்பு நிலையும் ஒன்றுபட்ட போராட்டங்களும் எதிர்காலத்திலும் அவசியம் என த.மு.எ.க.ச வலியுறுத்துகிறது’என்று தெரிவித்துள்ளது.

இந்த நூலை எழுதிய எழுத்தாளர் அருந்ததி ராயும் இந்த முடிவுக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி குறிப்பு எழுதியுள்ளார்.

நீக்கப்பட்ட புத்தகம் மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்ப்பு – அருந்ததி ராய் மகிழ்ச்சி

அதில், “திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ‘வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ என்ற எனது நூலை மீண்டும் அதன் பாடத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டிருப்பதாக அறிந்தேன். தனி நபர்கள், அமைப்புகள், அரசியல்வாதிகள் மற்றும் செய்தி ஊடகங்கள் முன்னெடுத்த பொது விவாதம் இல்லாமல் இது ஒருபோதும் நடந்திருக்க முடியாது. அறிவுப்பூர்வமாக முதிர்ச்சியடைந்த சமூகங்கள், மக்கள், நாடுகள் இப்படித்தான் துடிப்பாக மற்றும் உயிரோட்டமாக இருக்க முயற்சி செய்கின்றனர். புத்தகத்திற்காகப் பேசிய அனைவருக்கும் மற்றும் எம்.எஸ் பல்கலைக்கழகத்திற்கும், அழுத்தத்துக்கும், மிரட்டலுக்கும் பணியாமல் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுத்த பல்கலைக் கழகத்துக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.