• February
    29
    Saturday

Main Area

Main‘தர்பார்’ விமர்சனம்… எவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது… இப்படி பண்ணிட்டிங்களே முருகதாஸ்.!?

darbar-movie-crew
darbar-movie-crew

விஜயகாந்த்துக்கு ரமணா, சூர்யாவுக்கு கஜினி, விஜய்க்கு துப்பாக்கி, இந்த மூன்று படங்களும் இவர்களின் கேரியரில் மிகவும் முக்கியமான படங்கள். இந்த 3 படத்தின்  ஸ்டார் இயக்குநர் முருகதாஸ், முதன்முறையாக சூப்பர் ஸ்டாருடன் இணைகிறார் என்று தெரிந்த உடனே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 

படத்திற்கு ‘தர்பார்’ என்று பெயர் வைத்ததும் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு உதவி செய்யும் வகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் அரசியல் படமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. தர்பார் என்ற வார்த்தைக்கு பின்னால் இருக்கும் குறியீடு என்ன என்று அணைத்து மொழிகளிலும் ரசிகர்கள் புதுப்புது அர்த்தம் கொடுத்ததெல்லாம் வேற நடந்தது! 

பின்னர் இப்படத்தில் ரஜினி போலீஸ் கமிஷனராக நடிக்கிறார் என்று தெரியவந்தபோது  மும்பை சிட்டியின் ஒரு போலீஸ்  கமிஷனருக்கும் ஒரு மிகப்பெரும் டானுக்கும் நடைபெறும் ‘டக் ஆஃப் வார்’ராக துப்பாக்கியை விட பரபரப்பாக ஒரு படம் வரப்போகிறது என்று ரஜினி ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். 

darbar

ஒரு திரைக்கதையில் ரசிகர்கள் எதிர்பார்க்காததை கொடுத்து ட்விஸ்ட் தருவார்கள் புத்திசாலி இயக்குனர்கள். முருகதாசும் அதைத்தான் செய்திருக்கிறார்... ஆனால் திரைக்கதையில் இல்லாமல், பரபரப்பாக ஒரு படம் வரும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு உப்புச் சப்பில்லாத ஒரு படத்தைக் கொடுத்து ‘ட்விஸ்ட்’ கொடுத்து இருக்கிறார் முருகதாஸ். 

எண்ணி சொல்லிவிடும் படி சில விஷயங்கள் படத்தில் உள்ளன. ரஜினியை மிக ஸ்டைலாக யூத்தாக காட்டியுள்ளார்கள். ஒரு டான் படத்திற்கு ஏற்ற டோனுடன் ஒளிப்பதிவு செய்துள்ளார் சந்தோஷ் சிவன். ஸ்ரீகர் பிரசாத்தின் கத்திரி எடிட்டிங்கில் நன்றாக வேலை செய்துள்ளது. இது இல்லாமல் படத்தில் மொத்தமே ஒரு நான்கு சீன்கள் தான். ரஜினியின் வீட்டுக்கு ஸ்ரீமன் வந்து என் தங்கையை உங்களுக்கு கட்டி தர முடியாது என்று நாசுக்காக சொல்லும் அந்த சீன். தன் தந்தைக்கு காதல் தோல்வி என்று தெரிந்தவுடன் நிவேதா தாமஸ் ரஜினியுடன் பேசும் அந்த காட்சி. தான் சாகப் போவது தெரிந்து நிவேதா தாமஸ் துடிப்பது என்று குறிப்பிட்ட சில காட்சிகள் மட்டும்தான் சொல்லிக்கொள்ளும்படி இருக்கிறது! 

darbar-villain

ரயில்வே ஸ்டேஷனில் திருநங்கைகளின் நடன பின்னணியில் ஒரு சண்டைக்காட்சி ரசிக்கும்படி எடுத்துள்ளனர். ஆனால் ஒரு மிகப்பெரும் டான் வழக்கம்போல 10 பேர்களை கையில் ‘ஸ்டிக்’கை கொடுத்து அனுப்புவதெல்லாம் எந்தக்காலத்தில் !  அதனாலேயே,அந்த சண்டையும் எமோஷனலாக ரசிக்க முடியவில்லை.அது மட்டுமல்ல, கடின உழைப்பைக் கொட்டிய அனைத்து சண்டைக் காட்சிகளும் எந்தவித எமோசனலும் இல்லாததால் எந்த சண்டை காட்சியும் நம்மை  உணர்ச்சி வசப்பட வைக்க செய்யவில்லை. 

சரி,சண்டை காட்சிதான் இப்படியென்றால் பாடல் காட்சிகளை கொண்டுவருவதற்காக திணிக்கப்பட்ட ‘லீட்’ காட்சிகளெல்லாம் ரொம்ப அமெச்சூராக உள்ளது. அதிலும் குறிப்பாக நயன்தாரா வீட்டில் செயின் திருட்டை கண்டு பிடிக்கப் போய் ரஜினி ஆடிப்பாடும் அந்த நடன காட்சி. போதாக்குறைக்கு பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவேயில்லை. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் அனிரூத்.

darbar-poster

ரஜினியை அழகாக காட்டுகிறேன் என்று  சில குளோசப் காட்சிகளில் ரஜினியின் உதட்டில் இடப்பட்டுள்ள லிப்ஸ்டிக் நம்மை பயமுறுத்துகிறது. படத்தில் ஏன் நயன்தாரா இருக்கிறார்? ஏன் யோகிபாபு இருக்கிறார்? என ஒன்றுமே நமக்கு புரியவில்லை. அஷ்டமி, நவமி, கௌதமி என்ற ஒரு மொக்க ஜோக் உடன் யோகி பாபு  திருப்திப்பட்டுக் கொள்கின்றார். 

மும்பை சிட்டி கமிஷனர் ஏன் டெல்லியிலிருந்து நியமிக்கப் படுகின்றார் என்று தெரியவில்லை. சிட்டி கமிஷனர் மத்திய சிறைக்குள் சென்று குற்றவாளியை நேரடியாக சுட்டு கொள்வதெல்லாம் அபத்தத்தின் உச்சக்கட்டம்.  காவல்துறை ஒரு ஐஜியின் கன்ட்ரோலிலும், சிறைத்துறை வேறு ஐஜியின் கன்ட்ரோலிலும் இருக்கும் என்ற அடிப்படை கூட தெரியாமல் இவ்வளவு பெரிய இயக்குனர் திரைக்கதை பண்ணி இருக்கிறார் என்பது அதிர்ச்சியா இருக்கு.

darbar

ரஜினி புத்திசாலித்தனமான கமிஷனர் என்பதற்காக உருவாக்கப்பட்ட காட்சிகளிலெல்லாம் மருந்துக்குக்கூட புத்திசாலித்தனம் இல்லை.  எல்லா பிரச்சினைகளையும் சிட்டி கமிஷனர் சண்டைக் காட்சியின் மூலமே முடித்துக் கொள்கிறார். அந்த கிளைமாக்ஸ் காட்சி உட்பட!  சுனில் ஷெட்டி என்ற ஒருவர் வில்லனாக படத்தில் இருக்கின்றார் ஹீரோவை கொல்ல மாட்டேன் என்று சொல்வதும் கிளைமாக்ஸில் ‘ஒன் அண்ட் ஒன் ஃபைட்’ டுக்காக அவரே ரஜினியை கூப்பிடுவதும் கொடுமையின் உச்சகட்டம்.ஆரம்ப காட்சிகளில் பரபரப்பாய் இருந்த ரசிகர் கூட்டம் கூட போகப்போக தியேட்டரில் மயான அமைதியாகி விடுகின்றனர். 

படத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா யோகிபாபு நிவேதா தாமஸ் ஸ்ரீமன் தவிர அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட் உட்பட அத்தனை நடிகர்களும் இந்திக்காரர்கள் தான். அவர்களை இந்தியிலேயே பேச வைத்து பின் தமிழில் டப்பிங் பண்ணி உள்ளார்கள். அதனால் படம் முழுக்க ஒரு டப்பிங் படத்தை பார்த்த உணர்வு எழுவதை அவ்வளவு முயன்றும் தவிர்க்க முடியவில்லை! என்ன,ரஜினிக்கு இருக்கும் மாஸ்… ‘தலைவா’ என்று வெறித்தனமாக கொண்டாடும் அவரது ரசிகர்களாலும் இந்தப் படத்திற்கான வியாபாரக் கணக்கு ஈடு செய்யப்பட்டு விடக்கூடும்… இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் முதலிடத்தில் இருக்கும் முருகதாஸ் மாதிரி இயக்குனர் இப்படி செய்திருக்கக்கூடாது..!?

2018 TopTamilNews. All rights reserved.