24 மணி நேரமும் ஏ.சி ரூமில் இருந்தால் இந்த பிரச்னை வருமாம்!

 

24 மணி நேரமும் ஏ.சி ரூமில் இருந்தால் இந்த பிரச்னை வருமாம்!

கோடைக் காலம் என்றாலே பலரது வீட்டில் 24 மணி நேரமும் ஏசி ஓடிக்கொண்டே இருக்கும். குழந்தைகளை ஏசி அறையை விட்டு வெளியே விடுவதே இல்லை என்று பெருமை பேசும் பெற்றோர்கள் பலரும் உள்ளனர். தொடர்ந்து ஏசி அறையிலேயே இருப்பது நல்லது இல்லை. இதனால் பல்வேறு உடல்நலக் குறைவு ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

24 மணி நேரமும் ஏ.சி ரூமில் இருந்தால் இந்த பிரச்னை வருமாம்!

ஏசி அறையில் என்று இல்லை, தொடர்ந்து ஒரே அறையில் உடல் உழைப்பு இன்றி அடைபட்டு கிடந்தால் உடல் பருமன் அதிகரிக்கும். உடலில் சுரக்கும் பல்வேறு ஹார்மோன்களின் அளவில் மாறுபாடு ஏற்படும். ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, குளிர்ச்சியான சூழலில் இருப்பதன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் பாதிக்கப்பட்டு உடல் பருமன் ஏற்படும்.

தொடர்ந்து மூட்டுக்கள் அசைக்கப்படாமல் ஒரே நிலையில் அமர்ந்திருப்பது மூட்டு வலியை ஏற்படுத்தும். மூட்டுக்கள் ஒரே நிலையில் இருப்பது அதன் நெகிழ்வு தன்மையை பாதித்து இறுக்கம் அடைய செய்யும். இதன் காரணமாக எலும்பு, மூட்டு வலிகள் அதிகரிக்கும்.

குளிர்ச்சியான காற்று கண்கள் மீது படும்போது கண்கள் உலர்ந்து போகும். இதன் காரணமாக கண் பார்வை மங்களாக மாறும். கண்கள் உலரும் பிரச்னை ஏற்பட்டால் தொடர்ந்து ஏசி அறையில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

ஏசி அறையிலேயே இருப்பதால் தாகம் எடுக்காது. அதே நேரத்தில் உடலின் உள் உறுப்புக்கள் செயல்பட போதுமான நீர்சத்து இல்லாததால் பாதிப்பு அடையும்.

சருமம் உலர்ந்து போய் சரும பிரச்னைகள் அதிகரிக்கும். தொடர்ந்து குளிர்ச்சியான சூழலில் இருக்கும்போது சருமம் சோர்வுற்று, வறண்டு போய்விடும். ஏசி காற்று தொண்டை, சுவாசப்பாதை, நுரையீரலின் இயல்பான பணியில் மாறுபாட்டை ஏற்படுத்தும். இதன் காரணமாக சுவாசப்பாதையில் அடைப்பு, நுரையீரல் பாதிப்பு போன்றவை ஏற்படலாம்.

குழந்தைகள் ஏசி அறையில் தொடர்ந்து இருந்தால் அவர்களின் உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்படும். இதன் காரணமாக குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். எலும்புகள் வளைந்துபோதல் போன்ற பிரச்னைகளும் ஏற்படும். எனவே. மாலை நேரத்தில் சூரிய ஒளியில் குழந்தைகளை விளையாட அனுப்பது நல்லது.