கோவையில் இளைஞர் வெட்டிக்கொலை... பட்டப்பகலில் நடந்த கொடூரம்

 
கோவையில் இளைஞர் வெட்டிக்கொலை... பட்டப்பகலில் நடந்த கொடூரம்

கோவை வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்து விட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் முகில்வேந்தன் மகன் இன்பரசன் (18). பிளம்பிங் வேலை செய்து வந்தார். இவர் தற்போது வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவர் வீட்டில் பிளம்பிங் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் தன்னுடன் வேலைக்கு வந்த இளைஞரை அழைத்துக் கொண்டு  பிளம்பிங் பணிக்கான பொருட்களை வாங்கச் சென்றனர். பின்னர் பொருட்களை வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் பொருட்களுடன் குடியிருப்பு நோக்கி வந்தனர். அப்போது வழி மறித்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் இன்பரசனை அரிவாளால் சராமாரியாக வெட்டியுள்ளனர். இதில் அவரது இரண்டு கை மணிகட்டும் துண்டிக்கப்பட்டது. பின்னர் அதே இடத்தில் அவரை தள்ளி விட்டு அங்கிருந்து மூவரும் தப்பிச் சென்றனர். உடன் இருந்த இளைஞர் அங்கிருந்து ஓடி வந்து அப்பகுதியை சேர்ந்த நபர்களுக்கும், போலீஸாருக்கும் தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த மாநகர துணை ஆணையர் தேவநாதன்  தலைமையிலான போலீஸார், ஆய்வு மேற்கொண்டு இன்பரசன் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் பிரிவு அதிகாரிகள் உதவியுடன் அப்பகுதியில் பதிவான இரத்த மாதிரி, முடி, உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் உதவியுடன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.  மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் போத்தனூர் உதவி ஆணையர் மணிவர்மன் தலைமையில் 4 ஆய்வாளர்கள் அடங்கிய 4 தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். முதல் கட்டமாக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.