கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி
![murder](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/c1d9944d6bcd4d252d6314a4f2cc996c.jpg)
திண்டுக்கல் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வரும் கள்ளகாதலுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ளது மா.மு.கோவிலூர் பிரிவில் உள்ள குருவிகுளம் காட்டுப் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் தலையில் 2 வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பதாக கடந்த 27ம் தேதி திண்டுக்கல் தாலுக்கா காவல் நிலையத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்த இடத்தில் இரண்டு மது பாட்டில்கள் இருந்துள்ளது மேலும் யாரேனும் அடித்துக் கொலை செய்தனரா? அல்லது மது போதையில் தரையில் விழுந்து தலையில் அடிபட்டு ரத்தப்போக்கு காரணமாக மரணம் ஏற்பட்டதா என போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதன் காரணமாக சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியானது.
இச்சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பெயரில் துணை காவல் கண்காணிப்பாளர் சிபி சாய் சௌந்தர்யன் தலைமையில், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இறந்து போன நபர் எரியோடு அருகே உள்ள காளனம்பட்டியை சேர்ந்த காளியப்பகவுண்டர் மகன் நாச்சிமுத்து (வயது 54) என்பதும் இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காளியம்மாள் (வயது 45) இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். ஒட்டன்சத்திரம் ஊர் காவல் படையில் வேலை பார்த்து வரும் மாங்கரை நடுப்பட்டியை சேர்ந்த நெடுஞ்செழியன் (வயது26) மகன் கிருபாகரனுக்கும் நாச்சிமுத்துவின் மனைவி காளியம்மாளுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததுள்ளது. இருவரின் கள்ளக்காதல் நாச்சிமுத்துக்கு தெரிய வந்தது. இதனை நாச்சிமுத்து பலமுறை கண்டித்துள்ளார் ஆனால் அதையும் மீறி இருவரும் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளனர். தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதிய காளியம்மாள் கணவனை கொலை செய்ய வேண்டும் என கள்ளக்காதலன் கிருபாகரனிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து கடந்த 26ம் தேதி நாச்சிமுத்துவும் காளியம்மாளும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்ப்பதற்காக வருகை தந்தனர். இந்த தகவலை காளியம்மாள் கிருபாகரனிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த கிருபாகரன் மது குடிக்கலாம் என நாச்சிமுத்துவுக்கு ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் மது அருந்த மாமுகோவிலூர் பிரிவு அருகே உள்ள குருவிகுளம் காட்டுப்பகுதிக்கு வந்துள்ளனர். இருவரும் மது அருந்து கொண்டிருந்த போது கிருபாகரன் தான் மறைத்து வைத்திருந்த கட்டையை எடுத்து நாச்சிமுத்துவின் தலையில் அடித்து படுகொலை செய்துள்ளார் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
நாச்சிமுத்துவின் மரணம் குறித்து மனைவி காளியம்மாளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்கு முரணாக பேசி உள்ளார். பின்னர் போலீசார் கிடக்குப்பிடி விசாரணையில் தானும் தனது கள்ளகாதலனும் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.