குடிபோதையில் தகராறு செய்த கணவனுக்கு காலி சிரஞ்சியை செலுத்தி கொலை செய்த மனைவி, தாய்
கஞ்சா, குடிபோதையில் தினமும் தகராறு செய்த நபரை மருந்தில்லாத ஊசி செலுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்து தற்கொலை நாடகம் நடத்திய மனைவி, தாய் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்
திருச்சி சஞ்சீவி நகர் வாடாமல்லி தெருவை சேர்ந்தவர் குணா என்கிற குணசேகரன் ( 34).. ஆட்டோ ஓட்டுநரான அவர் குடிபோதைக்கும், கஞ்சாவுக்கு அடிமையான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவி மற்றும் தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இதேபோல் நேற்று முன்தினம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த குணசேகரன் தனது மனைவி சுலோச்சனா, தாய் காமாட்சி ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டு அவர்களை அடித்துள்ளார்.
அதன் பிறகு வீட்டிற்குள் சென்று படுத்து உறங்கியுள்ளார். அப்பொழுது காமாட்சியின் உறவினர்களான திருநங்கைகள் விக்கி என்கிற லித்தின்யா ஸ்ரீ (வயது 19), குபேந்திரன் என்கிற நிபுயா (19), மற்றும் விஜயகுமார் (48) ஆகிய மூவரும் குணசேகரனின் வீட்டுக்கு வந்துள்ளனர். குணசேகரன் போதையில் தினமும் தங்களை அடித்து தொந்தரவு செய்தது குறித்து ஏற்கனவே அவர்கள் மூவரிடமும் குணசேகரனின் தாயும் மனைவியும் கூறியுள்ளனர். அதனால் குணசேகரனை கொல்ல ஐந்து பேரும் சேர்ந்து திட்டம் திட்டி உள்ளனர்.
நேற்று முன் தினம் குணசேகரன் வீட்டிற்குள் சென்ற பிறகு வீட்டிலிருந்த காமாட்சியும் சுலோச்சனாவும் வீட்டிற்கு வெளியில் வந்து அமர்ந்து கொண்டனர். லித்தின்யா ஸ்ரீ (வயது 19),குபேந்திரன் என்கிற நிபுயா (19), மற்றும் விஜயகுமார் மூவரும் உள்ளே சென்று குணசேகரனின் உடலில் மருந்தில்லாத காலி சிரஞ்சியை குத்தி உள்ளனர். தொடர்ந்து அவரை துப்பட்டாவால் கழுத்தை நெறித்துள்ளனர். காமாட்சியும் சுலோச்சனாவும் வெளியில் இருந்து காவல் காத்துள்ளனர். பின்னர் தூக்கில் தொங்கியவாறு குணசேகரனை தொங்கவிட்டு குணசேகரன் தற்கொலை செய்து கொண்டது போல செட்டப் செய்து அங்கிருந்து சென்றனர். மனைவியும் ஒன்றும் அறியாதது போல குணசேகரன் தற்கொலை செய்து கொண்டதாக காமாட்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கோட்டை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று பிரேத பரிசோதனையின் முடிவில் இந்த சம்பவம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் இது தற்கொலை அல்ல, கொலை என்பது தெரிய வந்துள்ளது. அதன் பேரில் கோட்டை போலீசார் காமாட்சி, சுலோச்சனா, விக்கி, குபேந்திரன், விஜயகுமார் ஆகிய ஐந்து பேர் மீதும் கொலை, சாட்சியங்களை மறைத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து செய்தனர்.