மாமியார் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மருமகள்
கரூரில் தோட்டத்தில் நடந்த வாக்குவாதம் ஆத்திரமடைந்த மருமகள், மாமியார் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள கோடந்தூர் ஊராட்சி வெட்டுக்காட்டு வலசை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 52). இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி (வயது 45). இவர்களுக்கு 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி ரஞ்சித் குமார் (வயது 20) என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். பவதாரணி (வயது 18) புன்னம் சத்திரம் அருகே உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். லோகநாதன் தனது தாய் பாப்பாத்தி (வயது 72), மகன், மகளுடன் வெட்டுக்காட்டு வலசில் குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு விஜயலட்சுமி திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி உள்ளார். 8 வருடங்களாக மாதம் 2 முறை தனது மகன், மகளை பார்ப்பதற்காக விஜயலட்சுமி வெட்டுக்காட்டு வலசுக்கு வந்து செல்வார். இந்நிலையில் கடந்த 18ந்தேதி தனது மகன் மற்றும் மகளை பார்ப்பதற்காக வெட்டுக்காட்டுவலசு வந்து தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று ஆடு மேய்க்கச் சென்ற பார்வதி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவருடைய மகன் அக்கம் பக்கம் தேடி பார்த்த நிலையில் இன்று காலை முகத்தில் ரத்த காயத்துடன் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான காட்டில் இறந்த நிலையில் இருப்பதை பார்த்துள்ளார். இது குறித்து லோகநாதன் தென்னிலை போலீசில் தகவல் கொடுத்ததன் அடிப்படையில் தென்னிலை இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் சென்று விசாரணை மேற்கொண்டு வந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் விஜயலட்சுமி ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் பதுங்கி இருந்ததாக கிடைத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற விஜயலட்சுமியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பார்வதி தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது விஜயலட்சுமி அந்த வழியாக வந்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மருமகள் விஜயலட்சுமி மாமியார் பார்வதி தலையில் கல்லை போட்டு கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.