மகளை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட தந்தை கொலை

 
கொலை

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மகளை கிண்டல் செய்த இளைஞரை தட்டி கேட்ட தந்தை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

murder

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வீராணம்பட்டியைச்  சேர்ந்தவர் கருப்பையா மகன் பொப்பன் என்ற சின்னராஜ் (48).  இவரது மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவரை அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான  ராஜபெருமாள் மகன் முருகன் என்ற சண்முகம் (21) என்பவர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து முருகன் தன்னை கிண்டல் செய்வதாக ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி அவரது தந்தையான பொப்பனிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து பொப்பன் இன்று மாலை  வீராணம்பட்டி விலக்கு சாலையில் உள்ள தேநீர் கடை அருகே முருகனை அழைத்து தனது மகளை கிண்டல் செய்யக்கூடாது என்று கண்டித்துள்ளார். அப்போது முருகன் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பொப்பன் கண்டிக்கும் பொழுது அவருக்கும் முருகனுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் வீட்டிற்கு சென்று கத்தி எடுத்து வந்து பொப்பனை வயிற்றில் குத்தியுள்ளார். 

இதில்  படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பொப்பனை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே பொப்பன் உயிரிழந்து விட்டதாக கூறியதால் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பனையபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு அங்கிருந்து பொப்பனை குத்தி கொலை செய்துவிட்டு தப்பிய இளைஞர் முருகனை தேடிய நிலையில் அவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து பனையப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த பொப்பனின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக திருமயம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பதட்டமான சூழல் நிலவு எது இதனையடுத்து காவல்துறையினர் அவரது உறவினர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.