பெசன்ட்நகர் கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் கொடூரக் கொலை! அதிரவைக்கும் காரணம்
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பெரும்பாக்கத்தை ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இன்று அதிகாலை கத்திக்குத்து காயங்களுடன் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக சாஸ்திரி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சாஸ்திரி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்த போது கொலை செய்யப்பட்டு கிடந்தது பெரும்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெயராஜ் (வயது 26) என்பதும் இவர் மீது சிறு சிறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் சென்னை ஓட்டேரியை சேர்ந்த சினேகா என்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்த போது, தான் தனது கணவர் முகேஷ் குமாரை பிரிந்து கடந்த மூன்று மாதங்களாக தனியாக வசித்து வருவதாகவும், கொலையான ஜெயராஜ் தனது ஆண் நண்பர் எனவும் தெரிவித்துள்ளார். பெசன்ட் நகர் வேளாங்கண்ணி பேராலய திருவிழாவுக்கு தனது தோழியுடன் வந்ததாகவும், இதையறிந்த ஜெயராஜ் பெசன்ட் நகர் வந்து தன்னை சந்தித்து பேசிவிட்டு், நண்பர்களுடன் மது அருந்த சென்றதாகவும் சினேகாஅ தெரிவித்துள்ளார்.
மது அருந்தி கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டபோது, வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி வெள்ளை அஜித் கத்தியால் குத்தியதாகவும், மற்றவர்களும் சேர்ந்து தாக்கியதில் ஆட்டோ டிரைவர் ஜெயராஜ் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஓட்டேரியைச் சேர்ந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி வெள்ளை அஜித், நிர்மல், முகேஷ் உள்ளிட்ட பத்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.