கையில் அரிவாள்.. ரத்தம் சொட்ட சொட்ட... பட்டப் பகலில் இளைஞர் வெட்டி படுகொலை

 
கொலை

புதுக்கோட்டையில் பட்டப் பகலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட திருக்கோகர்ணம் வித்வான் தட்சிணாமூர்த்தி தெருவை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் பிரகாஷ் (28). இவர் காலை வேளையில் தினசரி நாளிதழ் விநியோகம் செய்யும் பணியையும் செய்து கொண்டு அதற்கு பின்னர் புதுக்கோட்டை திலகர் திடல் அருகே உள்ள ஒரு தீவன கடையில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ் வீடு இருக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள பிள்ளையார் கோயில் இடம் மற்றும் அதே பகுதியில் உள்ள மற்றொரு இடம் உள்ளிட்ட இருவேறு இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த கடந்த 15 தினங்களுக்கு முன்பு மலேசியாவிலிருந்து வருகை தந்த பிரகாஷின் உறவினரான பிரதீப்குமார் (28) என்பவர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்த நிலையில் பிரகாஷ் அதனை தட்டி கேட்டு நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் காவல் துறையில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இதனால் பிரகாஷ்க்கும் பிரதீப்பிற்கும் முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் 24ம் தேதி நள்ளிரவு பிரதீப்குமார் அரிவாளை வைத்து பிரகாஷின் வீட்டிற்கே சென்று மிரட்டியதாகவும், அதுகுறித்து பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பிரகாஷ் புதுக்கோட்டை திலகர்திடல் அருகே உள்ள தீவன கடையில் பணியில் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் இருவருடன் வந்த பிரதீப் குமார் இருவரை தூரமாக நிற்க வைத்துவிட்டு பிரதீப் குமார் பிரகாஷ் பணிபுரியும் தீவனக் கடைக்கு சென்று அவர் வைத்திருந்த அரிவாளை வைத்து பிரகாஷை சரமாரியாக வெட்டி சாய்த்தார். பின்னர் பிரதீப்குமார் அவருடன் வந்த இருவருடன் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரகாஷை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இளைஞரின் உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் குற்றவாளியை பிடிக்க அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி பிரதீப்குமாரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த நிலையில் அதில் உடன்பாடு ஏற்படாத பிரகாஷின் உறவினர்கள் புதுக்கோட்டை மச்சுவாடி அருகே அண்டக்குளம் பிரிவு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது படுகொலை செய்யப்பட்ட பிரகாஷின் உறவினர்கள் சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்திய நிலையில் காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவான நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாளைக்குள் குற்றவாளியை கைது செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட மக்கள் சுமார் 2 மணி  குற்றவாளியை கைது செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் நேற்று இரவு கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட பிரதீப்பின் வீட்டில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் மேலும் பதற்றம் அதிகரித்தது.