தொடர் வெடிகுண்டு வீச்சு: அச்சத்தில் சென்னை மக்கள்!

 

தொடர் வெடிகுண்டு வீச்சு: அச்சத்தில் சென்னை மக்கள்!

தமிழகத்தில் பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரம் நல்லதல்ல என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அண்மையில் வேதனையை வெளிப்படுத்தினர். அந்த அளவிற்கு தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து வந்தது. இந்நிலையில், சென்னையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த தேமுதிக பிரமுகர் ராஜசேகர், நேற்று இரவு வீட்டின் முன் நின்று பேசிக் கொண்டிருந்தபோது, ஐந்து பேர் கொண்ட கும்பல் அவர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதில் ராஜசேகர் தப்பித்துவிட்டதால், அவரை வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால், அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததால் அந்த கும்பல் தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜசேகர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக்கரணை போலீசார் விசாரணையில் முன் விரோதம் காரணமாக சம்பவம் நடந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்திற்கு காரணமான ஐந்து பேரை கைது செய்துள்ளனர். இரவில் நடந்த சம்பவத்தின் பரப்பரப்பு அடங்குவதற்குள் அதிகாலையில் மற்றொரு வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையை அடுத்த மேடவாக்கம் அடுத்த வேங்கைவாசலில் உள்ள திமுக பிரமுகரும், வழக்கறிஞருமான மனோநிதி வீட்டின் மீது நேற்று நள்ளிரவு காரில் வந்த 2 பேர் நாட்டுவெடிகுண்டை வீசினர். சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்தவர்கள் ஓடிவந்தபோது, காரில் ஏறி தப்பிவிட்டனர். பள்ளிக்கரணை போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமரா பதிவின் மூலம் ஆய்வு செய்ததில், அவர்கள் வேங்கைவாசலை சேர்ந்த ராஜேஷ், ஓட்டேரி கார்த்திக் என தெரியவந்தது. மேலும், முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

அடுத்தடுத்து நடந்துள்ள இந்த குண்டுவீச்சு சம்பவங்கள் சென்னை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.