2 முறை தொடர்ச்சியாக நின்றவர்களுக்கு வாய்ப்பு இல்லை… கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி

2 முறை தொடர்ச்சியாக நின்றவர்களுக்கு வாய்ப்பு இல்லை… கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி

கேரள சட்டப்பேரவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 2 முறை தொடர்ச்சியாக தேர்தலில் நின்றவர்களுக்கு வாய்ப்பு இல்லை அந்த கட்சி அறிவித்துள்ளது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி காலம் ஜூன் 1ம் தேதி முடிவடைய உள்ளது. இதனையடுத்து 140 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 6ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தல் ஆளும் இடது ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையிலான நேரடி மோதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 முறை தொடர்ச்சியாக நின்றவர்களுக்கு வாய்ப்பு இல்லை… கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி
பினராயி விஜயன்

இடது ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் மாநில செயலாளர் கனம் ராஜேந்திரன் கூறுகையில், 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும். தொடர்ச்சியாக 2 முறை தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.

2 முறை தொடர்ச்சியாக நின்றவர்களுக்கு வாய்ப்பு இல்லை… கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி
கனம் ராஜேந்திரன்

டைம்ஸ் நவ்-சி வோட்டர்ஸின் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பின்படி, இடது ஜனநாயக முன்னணி மொத்தமுள்ள 140 இடங்களில் 78 முதல் 86 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதனால் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.