கொரோனா தடுப்பூசி போட்டால் ஆண்மைக் குறைபாடு ஏற்படுமா? – சமூக ஊடகத்தைக் கலக்கும் வதந்திகள்

 

கொரோனா தடுப்பூசி போட்டால் ஆண்மைக் குறைபாடு ஏற்படுமா? – சமூக ஊடகத்தைக் கலக்கும் வதந்திகள்

கொரோனா தடுப்பூசி அறிமுகம் ஆகியே இரண்டு மாதங்கள்தான் ஆகிறது, அதற்குள்ளாக அது பற்றி ஏகப்பட்ட வதந்திகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று, கொரோனா தடுப்பூசி போட்டால் குழந்தையின்மை ஏற்படும் என்பது.

எதன் அடிப்படையில் இப்படி வதந்திகளைக் கிளப்பிவிடுகிறார்களோ தெரியவில்லை. ஜனவரி மாதம் மத்தியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் தொடங்கியது. அதிலும் மருத்துவப் பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இளைஞர்களுக்கு, கருத்தரிக்கத் தயாராகி வருபவர்களுக்கு தடுப்பூசி இன்னும் போடப்படவில்லை. அப்படியே போட்டிருந்தாலும் கூட இரண்டு மாதத்தில் எப்படி குழந்தைப் பிறக்க வாய்ப்பில்லாமல் போனது உறுதியாகி இருக்கும் என்று புரியவில்லை.

கொரோனா தடுப்பூசி போட்டால் ஆண்மைக் குறைபாடு ஏற்படுமா? – சமூக ஊடகத்தைக் கலக்கும் வதந்திகள்

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனிடம் கேட்ட போது, “தடுப்பூசி போட்டால் ஆண் அல்லது பெண் அல்லது இருவருக்கும் குழந்தையின்மை பிரச்னை வரும் என்பதற்கு எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆய்வும் இல்லை. தடுப்பூசி பாதுகாப்பானதுதான்” என்று கூறியுள்ளார்.

பரிசோதனை சரியாக முடிக்காமல் தடுப்பூசி போடப்படுகிறது என்று மற்றொரு வதந்தி சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் அதைத் தடுக்க வேகவேகமாக தடுப்பூசி கொண்டுவர வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது உண்மைதான். அதற்காக பாதுகாப்பில்லாத ஊசியைப் போடுகிறார்கள் என்பதில் உண்மையில்லை. பல லட்சம் பேர் தடுப்பூசி பெற்றுள்ளனர். அவர்களில் ஒரு சிலருக்கு அது வேலை செய்யவில்லையே தவிர பெரிதாக பாதிப்பு என்று எதுவும் இல்லை.

அதே போல் தடுப்பூசி போட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும் என்று சிலர் கூறுகின்றனர். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கத்தான் தடுப்பூசியே போடப்படுகிறது. இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ் கிருமியை நம்முடைய உடல் அடையாளம் கண்டுகொள்ள, அழிக்க, எதிர் காலத்தில் இதே போன்று கிருமி உள்ளே நுழைந்தால் ஆற்றலுடன் எதிர்கொள்வதற்காகப் போடப்படுகிறது. இது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பது இல்லை. எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம், வதந்திகளைப் பரப்ப வேண்டாம்!