குழந்தைகளுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டால்… இதை பின்பற்றுவது அவசியம்!

 

குழந்தைகளுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டால்… இதை பின்பற்றுவது அவசியம்!

கொரோனா இரண்டாம் அலை இப்போதுதான் கட்டுக்குள் வர ஆரம்பித்துள்ளது. அதற்குள்ளாக பல நாடுகளில் மூன்றாம் அலை ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்னும் ஒரு சில மாதங்களில் மூன்றாம் அலை இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

முதல் அலை முதியவர்களையும், இரண்டாம் அலை நடுத்தர வயதினரையும் தாக்கியது. மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், தற்போதுள்ள கொரோனா வைரஸ் கிருமியைக் காட்டிலும் பல மடங்கு அதிக ஆற்றல் கொண்டதாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

குழந்தைகளுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டால்… இதை பின்பற்றுவது அவசியம்!

இரண்டாம் அலையின் போது கொரோனாத் தொற்றுக்கு ஆளான பல குழந்தைகளுக்கு அதன் பிறகு பல்வேறு உள் உறுப்புக்கள் பாதிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகளுக்கு மல்டி சிஸ்டம் இன்ஃபிளமேட்டரி சிண்ட்ரோம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் குழந்தைகளை மிகவும் கவனத்துடன் பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமையாக உள்ளது.

கொரோனா நோயாளிகளை பொதுவாக மூன்றாகப் பிரிக்கின்றனர். எந்த அறிகுறியும் வெளிப்படாத அல்லது மிகவும் லேசான தொற்றுள்ள நோயாளிகள், மிதமான தொற்று மற்றும் தீவிர தொற்று நோயாளிகள் என்று பிரிக்கப்படுகின்றனர். இதன் அடிப்படையிலேயே யாருக்கு என்ன மாதிரியான சிகிச்சை என்று முடிவு செய்யப்படுகிறது.

இரண்டாம் அலையில் தொற்று உறுதியான பெரும்பாலான குழந்தைகள் அறிகுறிகள் வெளிப்படாதவர்களாக அல்லது லேசான பாதிப்பு உள்ளவர்களாகத்தான் இருந்தனர். இருப்பினும் சிலருக்கு தீவிர தொற்று ஏற்பட்டது. பெரும்பாலும் குடும்பத்தில் பெரியவர்களுக்கு தொற்று ஏற்பட்ட போது குடும்பத்தில் மற்றவர்களுக்கு தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்ட போதுதான் அறிகுறிகள் இல்லாத தொற்று குழந்தைகளுக்கு இருப்பது தெரியவந்தது.

பெரியவர்களுக்கு ஏற்பட்டது போன்றே காய்ச்சல், இருமல், சோர்வு, சுவாசித்தலில் சிரமம், தொண்டை வலி, வயிற்றுப் போக்கு, சுவை உணர்வு. வாசனை உணர்வு இல்லாமல் போவது போன்றவை ஏற்படலாம். அறிகுறிகள் இல்லாத, மிகவும் லேசான தொற்று என்றால் அவர்களுக்கு தொற்று இருப்பதே தெரியாமல் போய்விடும். அதனால் சிகிச்சையும் தேவைப்படுவது இல்லை.

லேசான தொற்று தென்பட்டால், அவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைத்தபடி காய்ச்சலுக்கான மருந்துகள் எடுக்க வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு அதை வைத்து வாய், தொண்டையைக் கொப்பளிக்க செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு தொடர்ந்து நீர் ஆகாரம் வழங்க வேண்டும். ஊட்டச்சத்து உள்ள உணவுகள் வழங்கினால் போதுமானது.

மிதமான தொற்று தீவிர தொற்று என்றால் உடனடியாக அவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும். தேவை எனில் சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனை செய்யலாம். அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு 94-95க்கு மேல் இருக்கிறதா என்று அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 94க்கு கீழ் செல்கிறது என்றால் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுவது, சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்ப்பது ஆகியவற்றை மேற்கொள்ளலாம். குழந்தைகளுக்கு தொற்றின் தீவிரத்தைப் பரிசோதனை செய்து அவர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிப்பது என்பதை மருத்துவர்கள் முடிவு செய்வார்கள். சாதாரண காய்ச்சல்தான், எங்கள் குழந்தை வெளியே செல்லவே இல்லை அதனால் கொரோனா இருக்காது என்று அலட்சியமாக இருந்துவிட்டு, கடைசி நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்வதை தவிர்ப்பது நல்லது.