கொரோனா 3ம் அலையில் குழந்தைகளுக்கு அதிகபட்சம் லேசான தொற்று ஏற்படலாம்! – மருத்துவர்கள் நம்பிக்கை

 

கொரோனா 3ம் அலையில் குழந்தைகளுக்கு அதிகபட்சம் லேசான தொற்று ஏற்படலாம்! – மருத்துவர்கள் நம்பிக்கை

கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் 3ம் அலை பற்றி அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மூன்றாம் அலை குழந்தைகளைத்தான் அதிக அளவில் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தங்கள் உயிருக்கு மேலான குழந்தைகளுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்ற அச்சம் ஒவ்வொரு பெற்றோர் மனதிலும் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் பெரும்பாலும் அவர்களுக்கு அறிகுறிகளைக் கூட வெளிப்படுத்தாத அளவிலும் மிகவும் லேசான தொற்றாகவும் மட்டும் இருக்கும். மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தலாக இருக்காது என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கொரோனா 3ம் அலையில் குழந்தைகளுக்கு அதிகபட்சம் லேசான தொற்று ஏற்படலாம்! – மருத்துவர்கள் நம்பிக்கை

இது தொடர்பாக வெளியான ஆய்வில், இரண்டாம் அலையில் அதிக அளவில் குழந்தைகளுக்கும் தொற்று ஏற்பட்டது. ஆனால் அறிகுறிகள் கூட வெளிப்படாத அளவிலேயே மிகவும் லேசான நிலையிலிருந்தது. வீட்டில் பெரியவர்களுக்கு தொற்று உறுதியான நிலையில், குடும்பத்தில் வேறு யாருக்கு எல்லாம் தொற்று பரவியுள்ளது என்று நடத்தப்பட்ட ஆய்வுகளில் மட்டுமே குழந்தைகளுக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இந்த நிலையில் மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு மிகப்பெரிய அளவில் தொற்று ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும் என்று அஜாக்கிரதையாக இருந்துவிட வேண்டாம்.

இந்தியக் குழந்தைகள் நல மருத்துவர்கள் அமைப்பு இது குறித்து கூறுகையில், “மூன்றாம் அலையில் முக்கியமாகக் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், அவர்களுக்கு மிகத் தீவிர தொற்று என்ற அளவில் ஏற்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்று தெரிவித்துள்ளது.

குழந்தைகள் நல மருத்துவர்கள் இது குறித்து கூறுகையில், “குழந்தைகளுக்கு அதிக அளவில் தடுப்பூசிகள் போடப்பட்டு அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் ஆற்றலுடன் உள்ளது. இதனால் மூன்றாம் அலையில் அவர்களுக்கு தொற்று ஏற்படலாம். அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் அதிகபட்சம் லேசான பாதிப்பு என்ற அளவில் இருக்கலாம்.

குழந்தைகளின் நுரையீரலில் ACE2 receptors மிகக் குறைந்த அளவில் இருக்கும். இதனால் கொரோனா வைரஸால் இங்கு பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பு குறைகிறது. குழந்தைகள் உடலில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் அதிக அளவில் இருக்கும். இது கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பாக இருக்கும். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தொடர்ந்து தடுப்பூசி போட்டு வந்துள்ளோம். இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையானதாக மாற்றியிருக்கும். இவை எல்லாம் குழந்தைகளுக்கு கொரோனா மிகத் தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்” என்றனர்.