கொரோனாவில் இருந்து மீண்டாலும் இந்த பிரச்னைகள் எல்லாம் வரலாம்…

 

கொரோனாவில் இருந்து மீண்டாலும் இந்த பிரச்னைகள் எல்லாம் வரலாம்…

கொரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் எந்த அளவுக்கு மோசமானதாக உள்ளதோ, அதே போன்று தான் கொரோனாவில் இருந்து மீண்டாலும் வரக்கூடிய சிக்கல்கள் உள்ளன. கொரோனாவில் இருந்து மீண்டவர்களை ஆய்வு செய்த நிபுணர்கள் நோயாளிகளின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், மூளை என அனைத்து உள் உறுப்புகளும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து மீண்டாலும் இந்த பிரச்னைகள் எல்லாம் வரலாம்…

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு இரண்டு வாரங்கள் முதல் 12 வாரங்கள் வரையில் அதன் தாக்கம் இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஸ்டான்ஃபோர்டு யூனிவர்சிடி ஸ்கூல் ஆஃப் மெடிசன் மேற்கொண்ட ஆய்வில், மிக மோசமான பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமானோருக்கு அதாவது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்றவர்களுக்கு ஒரு மாதத்துக்குப் பிறகும் கூட பல்வேறு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

பெரும்பாலானவர்கள் அதீத சோர்வுடன் இருந்ததாக தெரிவித்துள்ளனர். அதே போல் சிந்திக்கும் திறனில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக மனக் குழப்பம், சோர்வு போன்றவை ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சிலர் தங்களுக்கு சுவாசக் திணறல் ஏற்பட்டதாகவும், சிலர் காய்ச்சல், வறட்டு இருமல், மூட்டுக்களில் வலி, தொண்டை வலி மற்றும் தொண்டையில் புண், வயிற்றுப் போக்கு, தூக்கமின்மை, ஆக்சிஜன் குறைவு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் கொரோனாவுக்குப் பிறகும் கூட உணவின் சுவை தெரியாமை, வாசனை திறன் பாதிப்பு உள்பட 84 வகையான பாதிப்புகள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவால் ஏற்படும் பாதிப்பைப் போல், கொரோனாவுக்குப் பிறகு வரும் பாதிப்புகளும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. திடீர் மாரடைப்பு போன்ற பாதிப்பு ஏற்பட்டு பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த சூழலை எதிர்கொள்ள என்ன மாதிரியான பிரச்னைகள் எல்லாம் வரும், ஏன் வருகிறது என்பதை கண்டறிய இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்று பல்கலைக் கழக பேராசிரியர் டாக்டர் ஸ்டீவன் குட்மேன் தெரிவித்துள்ளார். இதற்காக மிகப்பெரிய அளவில் 1.5 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.