நாடு முழுவதிலும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் அமலுக்கு வந்தது. தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் சேர்த்து 3 ஆயிரம் தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அடுத்தக்கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு நாள் இடைவெளி விட்டு தடுப்பூசி செலுத்துமாறு மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டதன் படி, பெரு நகரங்களில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அடுத்த 2 மாதத்திற்குள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களுடன் சேர்த்து கொரோனா தடுப்பூசி விவரங்களையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் இதுவரை 15.37 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுவரும் நிலையில் அடுத்த வாரத்திலிருந்து 7 மாநிலங்களில் கோவாக்சின் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்ட 6 பேர் உயிரிழந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் குருகிராமில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 56 வயதுடைய நபர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் அவரது இறப்புக்கு காரணம் தடுப்பூசி காரணமல்ல, கார்டியோ நுரையீரல் பிரச்னையே காரணம் என்பது உறுதியாகியுள்ளது.