ஆகஸ்டில் கொரோனா 3ம் அலை… செப்டம்பரில் உச்சம்… நிபுணர்கள் எச்சரிக்கை!

 

ஆகஸ்டில் கொரோனா 3ம் அலை… செப்டம்பரில் உச்சம்… நிபுணர்கள் எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை இன்னும் முழுமையாக அகலவில்லை. அதற்குள்ளாக மூன்றாம் அலைக்கான நாளை விஞ்ஞானிகள் குறித்துவிட்டார்கள். ஆம், ஆகஸ்ட் மாதம் கொரோனா 3ம் அலை பரவல் ஏற்படும் என்று எச்சரக்கைவிடுத்துள்ளனர்.

ஆகஸ்டில் கொரோனா 3ம் அலை… செப்டம்பரில் உச்சம்… நிபுணர்கள் எச்சரிக்கை!

இந்த ஒன்றரை ஆண்டுகளில் நம் அன்புக்குரியவர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள், உடன் பணி புரிபவர்கள் என பலரை கொரோனா காவு வாங்கிக்கொண்டது. கொரோனாவை தடுப்பூசி தடுக்கும்… குறைந்த பட்சம் உயிரிழப்பாவது குறையும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் மொத்த மக்கள் தொகையில் ஒற்றை இலக்க சதவிகிதத்தில்தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 42 கோடி தடுப்பூசியில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெறும் 8.9 கோடி பேர் தான். நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் 9 கோடி பேருக்குத் தடுப்பூசி என்பது போதுமானதாக இல்லை. இதனால் கொரோனா பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்திய அளவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. கேரளாவில் மட்டுமே தற்போது அதிக நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். சில மாநிலங்களில் ஒரு ஆயிரம் அளவிலும், மற்ற மாநிலங்களில் மூன்று, இரட்டை இலக்கத்திலும் நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர்.

ஆனால் கொரோனா 3ம் ஆலை இந்த ஜூலை மாதம் 4ம் தேதி தொடங்கிவிட்டது என்று விஞ்ஞானிகள் சிலர் தெரிவிக்கின்றனர். 2ம் அலை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கியது. அதன் பாதிப்பு மார்ச் இறுதியில் வெளிப்பட்டது. அது போன்று 3ம் அலை ஜூலையில் தொடங்கியது. ஆகஸ்டில் பாதிப்பு வெளிப்படும் என்று தெரிவிக்கின்றனர்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் 3ம் அலை முந்தைய 2ம் அலையைக் காட்டிலும் 1.7 மடங்கு ஆபத்தானதாக, கொடியதாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. ஆகஸ்டில் அதிகரிக்கத் தொடங்கும் 3ம் அலை செப்டம்பரில் உச்சத்தைத் தொடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

3ம் அலையைத் தடுக்க பொது மக்களுக்கு அதிக அளவில் தடுப்பூசி போடப்பட வேண்டும். பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். கொரோனா நோயாளி என சந்தேகம் வந்தால் உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தி, அவருடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். பொது மக்களும் சமூக இடைவெளி, இரட்டை மாஸ்க், சானிடைசர் பயன்படுத்துவதைக் கடமையாகப் பின்பற்ற வேண்டும். இப்படி செய்தால் 3ம் அலை மிகக் கொடியதாக மாறுவதற்கான வாய்ப்பு குறையும்.

அதே நேரத்தில் மாநில அரசுகள் போதுமான அளவில் மாத்திரை – மருந்து, ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும். மருத்துவ மனை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தொற்று அதிகரித்தாலும் உயிரிழப்பைக் குறைக்கலாம்.