ரயில் தண்டவாளத்தின் அருகே வீசப்பட்ட போலி ரூபாய் நோட்டுகள்… தருமபுரி அருகே பரபரப்பு!

 

ரயில் தண்டவாளத்தின் அருகே வீசப்பட்ட போலி ரூபாய் நோட்டுகள்… தருமபுரி அருகே பரபரப்பு!

தருமபுரி

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் – தொப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட குண்டுக்கல் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தின் அருகே இன்று காலை 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்துள்ளன. இதனை கண்ட ரயில்வே ஊழியர்கள், இதுகுறித்து உடனடியாக தருமபுரி ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

ரயில் தண்டவாளத்தின் அருகே வீசப்பட்ட போலி ரூபாய் நோட்டுகள்… தருமபுரி அருகே பரபரப்பு!

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் மற்றும் தீவட்டிபட்டி காவல் நிலைய போலீசார் அங்கு சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, அந்த ரூபாய் நோட்டுகள் கலர் ஜெரக்ஸ் எடுக்கப்பட்டவை என்பதும், அந்த நோட்டுகளில் சில்ட்ரன்ஸ் பேங்க் ஆஃப் இந்தியா எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், ரூபாய் நோட்டுகளில் மிக்கி மவுஸ் படமும் அச்சிடப்பட்டு இருந்தது.

இதனால், அந்த ரூபாய் நோட்டுகள் குழந்தைகள் விளையாடும் பொம்மை நோட்டுகள் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, போலி ரூபாய் நோட்டுகளை பிறிமுதல் செய்த ரயில்வே போலீசார், அதனை வீசிச் சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில்வே தண்டவாளத்தில் கட்டுக்கட்டாக போலி ரூபாய் நோட்டுகள் வீசப்பட்ட சம்பவம் குண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.