`4 நாள் சட்டப்பேரவை கூட்டத்துக்கு வந்தார்; புதுச்சேரி எம்எல்ஏவுக்கு கொரோனா!’- அச்சத்தில் நிர்வாகிகள், சக எம்எல்ஏக்கள்

 

`4 நாள் சட்டப்பேரவை கூட்டத்துக்கு வந்தார்; புதுச்சேரி எம்எல்ஏவுக்கு கொரோனா!’- அச்சத்தில் நிர்வாகிகள், சக எம்எல்ஏக்கள்

புதுச்சேரி என்.ஆர்.காங். எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா தொற்றை ஓரளவு கட்டுப்படுத்தி வருகிறார் முதல்வர் நாராயணசாமி. நேற்று 647 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 95 பேர், காரைக்கால், மாகியில் தலா ஒருவர் என மொத்தம் 97 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 2,513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 35 ஆகவும் உயர்ந்துள்ளது.

கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 47 பேர், ஜிப்மரில் 20 பேர், கொரோனா கேர் சென்டரில் 15 பேர், காரைக்காலில் ஒருவர் என மொத்தம் 83 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். மாநிலத்தில் இதுவரை 33,658 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 312 பேரின் பரிசோதனை முடிவுகள் காத்திருப்பில் உள்ளன.

`4 நாள் சட்டப்பேரவை கூட்டத்துக்கு வந்தார்; புதுச்சேரி எம்எல்ஏவுக்கு கொரோனா!’- அச்சத்தில் நிர்வாகிகள், சக எம்எல்ஏக்கள்

இந்த நிலையில், என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் புதுச்சேரி கதிர்காமம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஜெயபாலுக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டதில் கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரியில் முதல் முறையாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 20ம் தேதி கூடிய சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்ற அவர் தொடர்ந்து நான்கு நாட்கள் சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்று உள்ளார். இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
மேலும் அவர் சார்ந்துள்ள என்ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பாலன் ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நோய் ஏற்பட்டு இருக்கும் என்ற அச்சத்தில் உள்ளனர். கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரங்கசாமி சட்டமன்ற நிகழ்வுகளில் முகக்கவசம் இன்றி பங்கேற்றார். தற்போது நோயால் பாதிக்கப்பட்டு ஜெயபால் இரு தினங்களுக்கு முன் முகக்கவசம் அளித்த போதும் அதை வாங்கி சட்டை பைக்குள் வைத்து கொண்டார். இதனால் எதிர்க்கட்சி தலைவர் உட்பட அவருடன் தொடர்புடைய எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகளுக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.