தொடர்ச்சியாக குறைந்து வரும் பாதிப்பு; கொரோனாவின் பிடியில் இருந்து மீளுமா இந்தியா!?

 

தொடர்ச்சியாக குறைந்து வரும் பாதிப்பு; கொரோனாவின் பிடியில் இருந்து மீளுமா இந்தியா!?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,166 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உட்பட ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்தனர். அப்படி ஒரு நிலைமை மீண்டும் ஏற்படாத வண்ணம் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உள்ளிட்ட அதிரடி நடவடிக்கையை கையாண்டன. அதன் விளைவாக, கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது. எனினும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டதால் கடந்த சில வாரங்களாக பாதிப்பு திடீரென அதிகரித்தது. மாநில அரசுகள் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தி பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தன.

தொடர்ச்சியாக குறைந்து வரும் பாதிப்பு; கொரோனாவின் பிடியில் இருந்து மீளுமா இந்தியா!?

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,166 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஒரே நாளில் கொரோனாவுக்கு 437 பேர் பலியானதாகவும் 36,830 பேர் குணமடைந்ததாகவும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,69,846 ஆக குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நாள் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 36 ஆயிரமாக இருந்த நிலையில் நேற்று 32 ஆயிரமாக குறைந்தது. இன்று 25 ஆயிரமாக குறைந்துள்ளது. மேலும், கடந்த 146 நாட்களில் இல்லாத அளவுக்கு பாதிப்பு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.