தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நெருங்குவதால் எம்எல்ஏக்களின் வீடுகளுக்கே சென்று சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்கின்றனர்.
தமிழகத்தில் ஆண்டுக்கு இருமுறை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும். ஆண்டு தொடக்கத்திலேயே முதல் கூட்டத்தொடர் நடத்தி முடிக்கப்பட்டதை தொடர்ந்து, கொரோனாவால் குளிர்கால கூட்டத்தொடரை கூட்ட தாமதம் ஆனது. குறிப்பாக எம்எல்ஏக்கள் பலருக்கு பாதிப்பு பரவியதால், கூட்டத்தொடரை எப்படி நடத்துவது என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பின்னர், வரும் செப்.14 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு கூட்டத்தொடர் நடைபெறும் என சட்டப்பேரவை செயலாளர் அறிவித்தார்.

இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றப்பட வேண்டும் என்பதாலும் இட நெருக்கடியின் காரணத்தாலும் முதன்முறையாக சென்னை சேப்பாக்கத்தில் இருக்கும் கலைவாணர் அரங்கில் கூட்டத்தொடர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கூட்டத்தொடர் நடைபெற இன்னும் 2 நாட்களே இருப்பதால் தமிழக எம்எல்ஏக்களின் வீடுகளுக்கே சென்று சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி அமைச்சர்கள்,முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் இன்று கொரோனா பரிசோதனை நடைபெற உள்ளது. மேலும், பத்திரிகையாளர்களுக்கும் தலைமை செயலகத்தில் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.