கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் உடல் காட்டில் வீசப்பட்டதா?- திருச்சியில் நடந்ததை கண்ணீருடன் விளக்கும் மகன்

 

கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் உடல் காட்டில் வீசப்பட்டதா?- திருச்சியில் நடந்ததை கண்ணீருடன் விளக்கும் மகன்

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை காட்டில் வீசி சென்றுவிட்டதாக திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவமனை மீது குற்றச்சாட்டு எழுந்தது. அங்கு என்ன நடந்தது என்பது குறித்து உயிரிழந்தவரின் மகன் கண்ணீர் மல்க விளக்கம் அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், இருங்களூரில் எஸ்.ஆர்.எம் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பெண்ணாடத்தைச் சேர்ந்த சோமு என்ற 72 வயது முதியவருக்கு மூச்சுத் திணறல், கடுமையான தொண்டை வலி காரணமாக கடந்த 15ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அன்று மதியமே சோமு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சோமுவின் உடலை மருத்துவமனை நிர்வாகம் தங்களது ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்று கோட்டைமேடு என்கிற பகுதியில் உள்ள காட்டில் வீசிவிட்டு சென்றுவிட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் உடல் காட்டில் வீசப்பட்டதா?- திருச்சியில் நடந்ததை கண்ணீருடன் விளக்கும் மகன்
நடந்தது என்ன என்பது குறித்து சோமுவின் மகன் செல்ல பாண்டியனிடம் பேசியபோது, ”எங்க அப்பா சோமுக்கு கடுமையான தொண்டை வலியும், மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததால் திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் அனுமதித்தோம். அவர்கள் பரிசோதனைகள் எடுத்து சிகிச்சை அளித்த நிலையில் கடந்த 16ம் தேதி எங்க அப்பா இறந்துவிட்டார். உடலை நாங்கள் எடுத்துச்செல்கிறோம் என்று கூறியதும், இங்கிருந்து அடுத்த மாவட்டத்திற்கு எடுத்துச்செல்லக்கூடாது. இங்கு தான் புதைக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கும் காவல்துறைக்கும் மருத்துவமனை தரப்பினர் தகவல் அளித்தனர். கடந்த 16ம் தேதி எஸ்.ஆர்.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஆம்புலன்சில் ஏற்றி எங்க அப்பாவின் உடலை காட்டுப்பகுதியில் குழி தோண்டி நானும், எனது தம்பி மற்றும் ஆம்புலன்ஸில் ஓட்டுநர் என மூவரும்தான் அடக்கம் செய்து வந்தோம். போலீஸார் நெருக்கடி கொடுத்ததால் எங்க அப்பாவின் முகத்தைக்கூட பார்க்கவில்லை. மருத்துவமனை தரப்பில் எங்களிடம் ஒவ்வொன்றையும் கேட்டுக்கொண்டுதான் செய்தார்கள். என்னையும் எனது குடும்பத்தையும் பெண்ணாடத்தில் உள்ள எங்களது வீட்டில் அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் . சமூகவலைத்தளங்களில் இந்த வீடியோவை பகிரும் நண்பர்கள் தயவு செய்து எனது அப்பாவின் இறப்பைக் கொச்சைப்படுத்தாதீர்கள்” என்று கண்ணீர் மல்க கூறினார்.

கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் உடல் காட்டில் வீசப்பட்டதா?- திருச்சியில் நடந்ததை கண்ணீருடன் விளக்கும் மகன்

”சோமுவை மருத்துவமனையில் அனுமதித்த உடனே கொரோனா பரிசோதனை எடுத்துவிட்டோம். சிகிச்சை செய்துகொண்டிருக்கும் போதே அவரது மகன்களிடம், உங்கள் தந்தையை பிழைக்க வைப்பது கடினம். முயற்சி செய்யலாமா என்று கேட்டதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்து கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள். சோமு இறந்து போனதும் சுகாதார ஆய்வாளர் முத்துக்குமாரசாமி மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தோம். அவர்கள் கொடுத்த அறிவுரைபடிதான் கோட்டைமேடுவில் உள்ள காட்டுப்பகுதியில் 15 அடி ஆழத்திற்கு குழித்தோண்டி உடலை புதைத்தோம். இதை சோமுவின் மகன்கள் தான் செய்தார்கள். அவர்களுடன் அதிகாரிகளும் எங்களது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இருந்தனர். இதனை அதிகாரிகள் வீடியோ எடுத்துக்கொண்டார்கள். எங்கள் மீது கலங்கத்தை ஏற்படுத்துவதற்காக யாரோ சதி செய்திருக்கிறார்கள். ஆட்சியர் மற்றும் சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் கொடுக்க இருக்கிறோம்” என்று முடித்துக்கொண்டார் எஸ்.ஆர்.எஸ் மருத்துவமனையின் முதல்வர் குமார்.

ஹெல்த் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாராசாமியோ, ”பொதுவாக இந்த மாதிரியான பிரச்னைக்கு அந்தந்த வி.ஏ.ஒ க்கள் தான் எங்களிடம் பேசுவார்கள். அவர்களிடம் நாங்கள் எப்படி கையாள வேண்டும் என்று அறிவுரை கொடுப்போம். அவ்வளவுதுதான். பேட்டிக்கொடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. உயர் அதிகாரிகளிடம் பேசுங்கள்” என்று கூறிவிட்டார்.