கொரோனா:  மருத்துவமனையிலிருந்து மனுஷ்யபுத்திரன் டிஸ்சார்ஜ்

 

கொரோனா:  மருத்துவமனையிலிருந்து மனுஷ்யபுத்திரன் டிஸ்சார்ஜ்

கவிஞரும் திமுகவின் சார்பாக ஊடகங்களில் கலந்துகொள்பவருமான மனுஷ்யபுத்திரன் கொரோனா சிகிச்சையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு ஒரு வாரத்திற்கு முன் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிசிச்சையின்போது தான் எதிர்கொள்ளும் அனுபவங்களை முகநூலில் பகிர்ந்துவந்தார். அவற்றில் சில அனுபவங்கள் கவிதைகளாகவும் எழுதினார். கொரோனா நோய்த் தொற்றுள்ளவர்களுக்கு வாசனை, சுவை தெரியாது என்று மருத்துவர்களால் கூறப்படுகிறது. மனுஷ்யபுத்திரனுக்கு அப்படியான சூழலை எதிர்கொள்ளும்போது அதையே ஒரு கவிதையாக எழுதியிருக்கிறார்.

கொரோனா:  மருத்துவமனையிலிருந்து மனுஷ்யபுத்திரன் டிஸ்சார்ஜ்

இன்று காலைதான் கவனித்தேன்
காரமான சட்னி எந்த உறைப்புமின்றி
இறந்து போயிருந்தது

அவசரமாக
என் வாசனைத் திரவியத்தை எடுத்து
ஒரு துளியை கைகளில் தேய்த்து நுகர்ந்தேன்
அது வெறும் தண்ணீராக மாறியிருந்தது

இந்தக் கொள்ளை நோய் தினங்களில்
நான் அடைந்த துயரங்களிலேயே
பெரும் துயரம் இதுதான்

வாழ்க்கை
என்னை ஒரு பூனைக்குட்டியைபோல
சாக்குப்பையில் அடைத்து
எங்கோ கொண்டுபோய் விட்டபோதெல்லாம்
என் ருசிகளின் தடத்திலேதான்
நான் இருப்பிடத்திற்கு திரும்பி வந்தேன்

வளர்ப்பு நாய்களை
கடற்கரையில் கைவிட்டுச் செல்பவர்களைபோல
என் அன்பிற்குரியவர்கள்
என்னைக் கருணையற்று
விட்டுச்சென்ற காலங்களில் எல்லாம்
வாசனைகளின் தடங்களில்
அவர்களிடம் திரும்பி வந்துக்கிறேன்

எரியும் வாசனைகளை
எங்கிருந்தாலும்
என் நாசிகள்தான் முதலில் அறிந்துகொள்ளும்

விதவிதமான உணவகங்களில்
நான் எப்போதும் உண்பது
உணவையல்ல
அந்த உணவின் ருசியை மட்டுமே

அன்பே
உன்னை நான் நேசித்தது
உன் உடல் வாசனைக்காக மட்டுமே
என்பதை நீ அறிவாயா?

உன் உடலின் ருசிகளை
எதனோடு எல்லாம் ஒப்புமைப்படுத்தினேன்
என்பது உனக்கு நினைவிருக்கிறதா?

ஒருவனைக் கொல்லவேண்டு என்று தோன்றும்போது
ஒரு மலரை எடுத்து நுகர்வேன்
இந்த உலகம் சமாதானமாகிவிடும்

அருந்தும் மதுக்களின்
ஒவ்வொரு ருசியும்தானே
நான் என் இலட்சியத்தை நோக்கிச்
செல்லும் பாதைகள்

இன்றெனக்கு வாசனைகள் இல்லை
ருசிகள் இல்லை
என் உலகம் ஒரு நாளில்
நீர்த்துப்போய்விட்டது
வாசனையறியாத ஒரு ஓநாயென
இந்த வனத்தில்
திக்குத் தெரியாமல் அலைகிறேன்

வாசனைகள் தெரியாத ஒரு உலகில்
ருசி தெரியாத ஒரு நாளில்
நீங்கள் என்னை ஏமாற்றுவது சுலபம்
கொல்வது அதைவிட சுலபம்

ஒரு அன்பற்ற காதலைப்போல
ஒரு காமமற்ற கூடுதலைபோல
என்னால்
இந்த உலகத்தை நுகர முடியவில்லை
இந்த உலகத்தை ருசிக்க முடியவில்லை

18.7.2020
இரவு 7.51

கொரோனா:  மருத்துவமனையிலிருந்து மனுஷ்யபுத்திரன் டிஸ்சார்ஜ்

ஒருவாரமாக கொரோனாவுக்கான சிகிச்சையிலிருந்த மனுஷ்யபுத்திரன் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார். மருத்துவமனையின் தன்னைக் கவனித்துக்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்து ஒரு பதிவிட்டுள்ளார்.