குவைத், சிங்கப்பூர், பக்ரைன் நாடுகளில் இருந்து சென்னை வந்த 20 பேருக்கு கொரோனா உறுதி

 

குவைத், சிங்கப்பூர், பக்ரைன் நாடுகளில் இருந்து சென்னை வந்த 20 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை: குவைத், சிங்கப்பூர், பக்ரைன் நாடுகளில் இருந்து சென்னை வந்த 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஆக்கிரமித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா நோய்த் தொற்று காரணமாக 4,90,401 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2,85,637 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி உள்ளனர். நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,301-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் குவைத், சிங்கப்பூர், பக்ரைன் நாடுகளில் இருந்து சென்னை வந்த 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மே 7 முதல் ஜூன் 24 வரையிலான காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு வந்த 16 ஆயிரத்து 113 பேருக்கு விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் கொரோனா தொற்று இல்லாதவர்கள் 14 நாள்களுக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் 308 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் முகாமில் தனிமைப்படுத்தலுக்காக தங்கியிருந்த நபர்களுக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் குவைத்திலிருந்து திரும்பியவர்களில் 13 பேர், பக்ரைனிலிருந்து திரும்பியவர்களில் 5 பேர், சிங்கப்பூரிலிருந்து வந்தவர்களில் 2 பேர் என 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.