“கொரோனா உயிரிழப்புகளை மறைக்கக் கூடாது” : ராமதாஸ் வலியுறுத்தல்!

 

“கொரோனா உயிரிழப்புகளை மறைக்கக் கூடாது” : ராமதாஸ் வலியுறுத்தல்!

கொரோனா உயிரிழப்புகளை மறைக்கக் கூடாது; வெளிப்படைத்தன்மை தேவை என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், மற்றொருபுறம் நோய்த்தொற்று கண்டறியப்பட்டும், கண்டறியப்படாமலும் உயிரிழப்போரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து விட்டதாகவும், அது குறித்த செய்திகள் மறைக்கப்படுவதாகவும் வெளியாகும் செய்திகள் கவலையளிக்கின்றன. கொரோனா இறப்புகளை அரசே மறைப்பது அறத்தை மீறிய செயலாகும்.

“கொரோனா உயிரிழப்புகளை மறைக்கக் கூடாது” : ராமதாஸ் வலியுறுத்தல்!

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் நேற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேற்று முன்நாள் 297 பேரும், 12-ஆம் தேதி 293 பேரும் உயிரிழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உண்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், அந்த நேரங்களில் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் நிகழ்வதாகவும் மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கின்றனர். ஆக்சிஜன் இல்லாமல் நோயர்கள் உயிரிழப்பதும் தொடர்வதாக செய்திகள் வெளிவருகின்றன. இத்தகைய உயிரிழப்புகள் எதுவும் அரசின் அதிகாரப்பூர்வ கொரோனா உயிரிழப்பு பட்டியலில் சேர்க்கப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

தமிழ்நாட்டின் கள நிலவரத்தைப் பார்க்கும் போது இத்தகைய செய்திகளை ஒதுக்கித் தள்ளிவிட முடிவதில்லை. உதாரணமாக மதுரை மாவட்டத்தில் கடந்த 8-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் முறையே 7 பேர், 14 பேர், 14 பேர், 13 பேர், 7 பேர், 9 பேர், 11 பேர் உயிரிழந்ததாக கணக்குக் காட்டப்படுகிறது. ஆனால், மதுரையில் மாநகரில் உள்ள 10 சுடுகாடுகளுக்கு மட்டும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் வருவதாகவும், அவற்றில் 90%&க்கும் கூடுதலான உடல்கள் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி எரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு நாளும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை என்றும், அதற்காக 3 தகன மேடைகள் புதிதாக ஏற்படுத்தப்படுவதாகவும் மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கைக்கும், அரசு கணக்குக்கும் இடையிலான வேறுபாட்டை இது மிகத் துல்லியமாக காட்டுகிறது.

“கொரோனா உயிரிழப்புகளை மறைக்கக் கூடாது” : ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் மிகவும் குறைவாக இருப்பதாக கணக்குக் காட்டப்படும் மாவட்டங்களில் தருமபுரியும் ஒன்று. அங்கு கடந்த 8&ஆம் தேதி மூவரும், 11-ஆம் தேதி ஒருவரும், 13-ஆம் தேதி மூவரும் மட்டுமே உயிரிழந்ததாகவும், 9, 10, 12, 14 ஆகிய நாட்களில் ஓர் உயிரிழப்பு கூட இல்லை என்றும் புள்ளி விவரங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள சுடுகாடுகளில் உடல்களை எரிக்க முடியாத நிலை இருப்பதாகவும், பலரும் உடல்களை எரிப்பதற்காக காத்துக் கிடப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 12-ஆம் தேதி பிற்பகலுடன் முடிவடைந்த 36 மணி நேரத்தில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகமே தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் அறிக்கையில் தருமபுரி மாவட்டம் முழுவதும் 11-ஆம் தேதி மட்டுமே ஒருவர் உயிரிழந்தார்; 12-ஆம் தேதி எவரும் உயிரிழக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதில் எந்தத் தகவலை உண்மை என எடுத்துக்கொள்வது என தெரியவில்லை.

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களிலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை வைத்துக் கொண்டு சுடுகாடுகளைத் தேடி பலரும் அலைவதை பார்க்க முடிகிறது. ஆனால், தமிழக அரசுத் தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகக் காட்டப்படுகிறது. உயிரிழந்த மற்றவர்கள் வேறு காரணங்களால் இறந்ததாக அதிகாரிகள் கணக்குக் காட்டுகின்றனர். இது மிகவும் தவறாகும்.

“கொரோனா உயிரிழப்புகளை மறைக்கக் கூடாது” : ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மிக மோசமான கட்டத்தை அடைந்து விட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தங்களின் உயிர்களை பணயம் வைத்து மருத்துவம் செய்து வருகின்றனர். நோய்ப்பரவல் தடுப்பு, நோய்க்கு சிகிச்சை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் அடுத்த சில வாரங்களில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்து விட முடியும். அதற்கு நிலைமையின் தீவிரத்தை அனைவரும் வெளிப்படையாக புரிந்து கொள்ள வேண்டும். கள நிலைமையை வெளிப்படையாக தெரிவிப்பதில் எந்த தவறும் இல்லை. மாறாக, கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை மறைத்து, நிலைமை இயல்பாக இருப்பது போன்ற வெளித்தோற்றத்தை ஏற்படுத்த அரசும், அதிகாரிகளும் முயன்றால், கவனிக்கப்படாத புண் உள்ளுக்குள் புரையோடி குணப்படுத்த முடியாத நிலையை அடைவதைப் போன்று, தமிழகத்தின் கொரோனா நிலையும் மாறி விடக்கூடும். அது தவிர்க்கப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது சென்னையில் 236 கொரோனா உயிரிழப்புகள் கணக்கில் சேர்க்கப்படாத போது அதற்கு எதிராக கடுமையான கொந்தளிப்புகள் ஏற்பட்டன. இப்போதும் அதே போன்ற நிலை ஏற்பட்டு விடக் கூடாது. தமிழக முதலமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலின் அவரது முதல் ஆய்வுக் கூட்டத்திலேயே தகவல்களை மறைக்க வேண்டாம்; உண்மையாக தகவல்களைக் கூறுங்கள் என்று அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். அதன்பிறகும் கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப் படுவது ஏன் என்பது தெரியவில்லை. இது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு ஒப்பான செயலாகும்.

கொரோனா உயிரிழப்புகள் குறித்த உண்மையான புள்ளிவிவரங்கள் வெளியிடப்படும் போது ஒருவகை பதற்றமும், அச்சமும் ஏற்படலாம். அதில் தவறு இல்லை. ஒரு வகையில் கொரோனா பாதிப்புகளின் தீவிரத்தை உணர்ந்து கொண்டு, மக்கள் விழிப்புடன் இருக்கவும், ஊரடங்கை மதித்து நடப்பதற்கும் அது உதவக் கூடும். எனவே, கொரோனா உயிரிழப்புகளை மறைக்காமல், உண்மையான எண்ணிக்கையை வெளியிட வேண்டும்; முழு ஊரடங்கை கடுமையாக செயல்படுத்தி கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.