பெரம்பலூரில் வன்னியர் உள் ஒதுக்கீடு குறித்த சர்ச்சை போஸ்டரால் பரபரப்பு!

 

பெரம்பலூரில் வன்னியர் உள் ஒதுக்கீடு குறித்த சர்ச்சை போஸ்டரால் பரபரப்பு!

பெரம்பலூர்

பெரம்பலூர் நகரில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக கூறி, ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழக அரசு கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டு உள்ளது. இதற்கு, மிகவும் பிற்படுத்த சமூகத்தை சேர்ந்த மற்ற பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பெரம்பலூர் நகரின் பல்வேறு பகுதிகளிலும் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை நிறுத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறி சீர்மரபினர் மற்றும் டி.என்டி சமூகத்தினர் சார்பில் போஸ்டர் ஓட்டியுள்ளனர்.

பெரம்பலூரில் வன்னியர் உள் ஒதுக்கீடு குறித்த சர்ச்சை போஸ்டரால் பரபரப்பு!

மேலும், அந்த போஸ்டரில் தமிழக அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்திடவும், ஓரே டி.என்.டி சான்றிதழ் வழங்கி, அந்த சமூகத்தினருக்கு என தனி இடஒதுக்கீடு வழங்கவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. தமிழக அரசோ, நீதிமன்றமோ இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடாத நிலையில், இந்த போஸ்டர் ஒட்டப்பட்டதால் பெரம்பலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனிடையே, போஸ்டர் விவகாரம் குறித்து அறிந்த பாமகவினர் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், பொதுமக்கள் மத்தியிலும், வன்னியர் சமூகத்தினர் இடையிலும் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சமூக மோதலை உருவாக்கும் நோக்கத்திலும் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளதாகவும், எனவே போஸ்டரை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.