பாடாய்படுத்தும் மலச்சிக்கல்… தவிர்க்க தப்பிக்க என்ன வழி?

 

பாடாய்படுத்தும் மலச்சிக்கல்… தவிர்க்க தப்பிக்க என்ன வழி?

இந்தியாவில் 22 சதவிகித இந்தியர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை உள்ளது என்று 2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக பெருநகரங்களில் வாழ்பவர்கள் மத்தியில் மலச்சிக்கல் பிரச்னை அதிக அளவில் உள்ளது. பெரியவர்களுக்கு மட்டுமல்ல, இளைஞர்கள், நடுத்தர வயதினர் என அனைத்து வயதினரும், இரு பாலினத்தவரும் மலச்சிக்கல் பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றனர் என்கின்ற ஆய்வுகள்.

பாடாய்படுத்தும் மலச்சிக்கல்… தவிர்க்க தப்பிக்க என்ன வழி?

நாம் உட்கொண்ட உணவு செரிமானத்துக்குப் பிறகு ஊட்டச்சத்துக்கள் கிரகிக்கப்பட்டு பெருங்குடலில் தள்ளப்படுகிறது. அங்கிருந்து கழிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து மலக்குடல் நோக்கிப் பயணிக்கின்றன. இந்த இயக்கத்தில் பாதிப்பு ஏற்படுவதையே மலச்சிக்கல் என்கிறோம். மருத்துவ மொழியில் கூறுவது என்றால் ஒரு வாரத்துக்கு மூன்று முறை மட்டுமே மலங்கழிக்கின்றீர்கள் என்றால் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை உள்ளது. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை என்பதில் தொடங்கி ஒரு வாரத்துக்கு நான்கு முறையாவது மலம் கழித்தல் இயல்பு நிலை என்று கூறப்படுகிறது.

நாம் உட்கொண்ட உணவு உணவுக் குழாய் வழியாக இரைப்பையை அடைகிறது. அங்கு பல அமிலங்கள், நொதிகள் சுரக்கப்பட்டு உணவு செரிமானம் செய்யப்படுகிறது. சிறுகுடலில் மேலும் சில நொதிகள் சேர்க்கப்பட்டு உணவில் உள்ள ஊட்டச்சத்து கிரகிக்கப்படுகிறது. கிரகிக்கப்பட்ட உணவு கழிவுகள் பெருங்குடல், மலக்குடல் வழியாக தள்ளப்படுகிறது. உணவில் உள்ள நீர்ச் சத்து இங்குக் கிரகிக்கப்படுகிறது. கடைசியில் ஆசனவாய் வழியாக அவை வெளியேற்றப்படுகின்றன.

பாடாய்படுத்தும் மலச்சிக்கல்… தவிர்க்க தப்பிக்க என்ன வழி?

இந்த செயல்பாடு மெதுவாக நடைபெறும்போது மலச்சிக்கல் ஏற்படுகிறது. இப்படி தண்ணீர் கிரகிக்கப்படுவது தாமதம் ஆவதால் மலம் இறுகி வெளியேற முடியாமல் அடைத்துக்கொள்கிறது. கர்ப்ப காலம், சில மாத்திரை மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது மலச்சிக்கல் வரும். இது தவிர நம்முடைய உடல் உழைப்பு குறைவது, நார்ச்சத்து உள்ள உணவை போதுமான அளவு எடுக்காதது, போதுமான அளவில் தண்ணீர் அருந்தாதது உள்ளிட்ட காரணங்களாலும் மலச்சிக்கல் வரும்.

தினசரி உடற்பயிற்சி செய்யும்போது உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகிறது. அது செரிமான மண்டலத்துக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் குடல் தசைகள் தூண்டப்பட்டு செரிமானம் வேகமாக நடைபெறுகிறது. இதற்கு கடினமான உடற்பயிற்சிதான் செய்ய வேண்டும் என்று இல்லை. எளிய நடைப்பயிற்சி செய்தால் கூட பலனைக் காணலாம்.

உணவில் மாவுச் சத்தைக் குறைத்து நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை எடுக்க வேண்டும். ஜங்க் ஃபுட் முற்றிலும் தவிர்ப்பது நல்லது. நார்ச்சத்து மிக்க காய்கறி, பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது செரிமானம் ஆன உணவை ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்குக் கடத்தும் இரைப்பை மண்டலத்தின் செயல்பாடு மேம்படுகிறது.

போதுமான தண்ணீர் அருந்தாததும் மலச்சிக்கலுக்குக் காரணம் என்பதால் தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் அருந்துங்கள். ஒரே நேரத்தில் அருந்தாமல் இடைவெளி விட்டுத் தொடர்ந்து தண்ணீர் அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள கழிவுகள் பெருங்குடலுக்குத் தள்ளப்படும். இந்த மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தினால் மலச்சிக்கல் பிரச்னை வராது!