சுதந்திர தின போஸ்டரில் நேரு படம் இருட்டடிப்பு – “அறிவியலை கொண்டாடினால் சி.வி.ராமனை மறப்பீர்களா?” என ப.சிதம்பரம் கேள்வி!

 

சுதந்திர தின போஸ்டரில் நேரு படம் இருட்டடிப்பு – “அறிவியலை கொண்டாடினால் சி.வி.ராமனை மறப்பீர்களா?” என ப.சிதம்பரம் கேள்வி!

இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளானதை குறிக்கும் வகையில் விடுதலையின் அம்ரித் மஹோத்சவம் கொண்டாடப்படுகிறது. இதற்காக 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் டிஜிட்டல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில் அம்பேத்கர், காந்தி, சுபாஷ் சந்திர போஷ், சர்தார் வல்லபாய் படேல், சாவர்க்கர் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் அதனைக் கட்டமைக்க பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கிய முதல் பிரதமர் நேருவின் புகைப்படம் இடம்பெறவில்லை.

சுதந்திர தின போஸ்டரில் நேரு படம் இருட்டடிப்பு – “அறிவியலை கொண்டாடினால் சி.வி.ராமனை மறப்பீர்களா?” என ப.சிதம்பரம் கேள்வி!

நவீன இந்தியாவை வடிவமைத்த சிற்பி என்றழைக்கப்படும் நேரு, சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்று சிறை சென்றவர். அவரின் போராட்ட வரலாற்றையும் மறக்க முடியாது. ஆனால் அவரின் புகைப்படம் இல்லாமல் போனது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பலரும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்தனர். உச்சக்கட்டமாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மிகக் காட்டமாக ட்வீட் செய்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ICHR) வெளியிட்டுள்ள இந்த டிஜிட்டல் போஸ்டர் அதிர்ச்சியளிக்கிறது. இது தான் முதல் போஸ்டர். ஆனால் அந்த போஸ்டரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் இடம்பெறவில்லை. ஐசிஹெச்ஆரின் உறுப்பினர் செயலர் மத்திய அரசின் வெறுப்புக்கும், முன்முடிவுக்கும் படிந்துவிட்டார். காரைக் கொண்டாடும்போது ஹென்ரிஃபோர்டை நினைவுகூராமல் இருக்க முடியுமா?

விமானத்தைக் கொண்டாடும் போது ரைட் சகோதரர்கள் தானே முதலில் மரியாதை செய்யப்பட வேண்டும். இந்திய அறிவியலைக் கொண்டாடும் போது எப்படி சி.வி.ராமனை நாம் மறப்போம். ஆனால், நாட்டின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது ஜவஹர்லால் நேருவை எப்படி மறந்தனர். இவ்விவகாரத்தில் ஐசிஎச்ஆர் விளக்கங்கள் ஏற்புடையதாக இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.