சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்!

 

சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்!

குழப்பம், கூச்சல் நீடித்ததால் அவையில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் இன்று கேள்வி நேரத்துடன் தொடங்கியது. வழக்கம் போல திமுக மற்றும் அதிமுக அரசின் இடையே அனல்பறக்கும் வாதங்கள் எழுந்து வருகின்றன. தமிழகத்தில் தற்போது பெரும் பிரச்னையாக இருக்கும் நீட் தேர்வு குறித்து சட்டபேரவையில் விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்!

அதன் படி நீட் தேர்வு குறித்து விவாதங்கள் எழுந்த போது, கருணாநிதி ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை என முக ஸ்டாலின் தெரிவித்தார். அதற்கு, நீட் தேர்வு கொண்டு வந்த போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசுடன் திமுக கூட்டணியில் இல்லையா? என முதல்வர் கேள்வி எழுப்பினார். இதனிடையே நீட் வழக்கில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி ஆஜராகி வாதாடியதாக அதிமுக எம்எல்ஏ இன்பதுரை கூறினார்.

அப்போது கோபமடைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அதிமுக எம்எல்ஏக்களின் கருத்தை நீக்கக்கோரி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் குழப்பம், கூச்சல் நீடித்தது. இதனையடுத்து, சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏக்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டதன் பேரில், கே.ஆர்.ராமசாமி உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.