`மது விற்பனையை காட்டிக் கொடுத்தான்; கூட்டாளிகளுடன் கொன்றுவிட்டேன்!’- விசிக பிரமுகர் கொலையில் கைதானவர் வாக்குமூலம்

 

`மது விற்பனையை காட்டிக் கொடுத்தான்; கூட்டாளிகளுடன் கொன்றுவிட்டேன்!’- விசிக பிரமுகர் கொலையில் கைதானவர் வாக்குமூலம்

சென்னையில் மதுபானங்களை வீட்டில் கடத்தி வைத்து விற்பனை செய்து வந்தவரை காவல்துறையினரிடம் காட்டிக் கொடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை வீராகுட்டி தெருவை சேர்ந்தவர் கேசவன் (40), விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்.கே.நகர் பகுதி துணை செயலாளராக இருந்தார். இவரது மனைவி பிரியா (38). இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் ஆடிமாத கூழ்வார்த்தல் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கேசவன் செய்து கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று கேசவனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. ரத்த வெள்யத்தில் கிடந்த கேசவனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கேசவன் இறந்தார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக தண்டையார்பேட்டை காவல்துறையினர் விசாரணையில், அதே தெருவை சேர்ந்த மதன் (49) என்பவர் முன்விரோத தகராறில் கேசவனை கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து மதன், அவரது மனைவி மாலதி (48), சதீஷ் (30), மீன் குழம்பு சதீஸ் (38), நரேஷ் (28), அப்பு (30), கெஜா (38) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மதன் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், “ஊரடங்கால் சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடபட்டது. இதனை பயன்படுத்தி அந்த பகுதியில் மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்தேன். ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை கடந்த வாரம் கடத்தி வந்து, எங்கள் தெருவில் உள்ள 3 வீடுகளில் பதுக்கி வைத்திருந்தேன். இதுபற்றி அறிந்த கேசவன் காவல்துறையினரிடம் தெரிவித்துவிட்டார். இதனால் காவல்துறையினர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்துவிட்டனர். இதனால், கேசவனை கொல்ல திட்டமிட்டேன். கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை தீர்த்துக்கட்டினேன்” என்று கூறியுள்ளார்.