“வன விலங்குகள் தாண்டாத வகையில், எல்லைகளில் கான்கிரீட் சுவர் அமைக்கப்படும்” – வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்!

 

“வன விலங்குகள் தாண்டாத வகையில், எல்லைகளில் கான்கிரீட் சுவர் அமைக்கப்படும்” – வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்!

கோவை

வன விலங்குகள் தாண்டாத வகையில், வன எல்லைகளில் கான்கிரீட் சுவர்கள் அமைக்கப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

கோவை சாய்பாபா காலனி பகுதியில் நேற்று மாநகராட்சி சார்பில் தூய்மை பணியினை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்களுக்கு தினமும் பல்வேறு திட்டங்களை, எதிர்கட்சியினர் குற்றம் சொல்ல முடியாத அளவிற்கு தமிழக முதல்வர் அளித்து வருவதாகவும், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழகம் முழுதும் வரும்முன் காப்போம் என்ற அடிப்படையில் தூய்மை பணியினை அரசு செய்து வருவதாக தெரிவித்த அவர், இத்திட்டத்தின் படி கோவையில் 100 வார்டுகளிலும் 36.12 கி.மீ தூரம் தூய்மைபடுத்தபட உள்ளதாக கூறினார். மழைக் காலத்தில் தண்ணீர் தேங்காமல் சுத்தப்படுத்த படுவதாகவும், அவ்வாறு மழைநீர் தேங்காமல் இருந்தால், டெங்கு உருவாகாமல் தடுக்க முடியும் என்றும் அவர் கூறினார். இவற்றை தவிர்த்து, மக்களை தேடி மருத்துவம் மூலம் 5.99 லட்சம் பேர் பலன் அடைந்து உள்ளதாகவும் அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

“வன விலங்குகள் தாண்டாத வகையில், எல்லைகளில் கான்கிரீட் சுவர் அமைக்கப்படும்” – வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்!

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்திற்கு வாரம் 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளதாகவும், மக்கள் தொகை அடிப்படையில் வாரம் 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி ஒதுக்கினால் இன்னும் வேகமாக தடுப்பூசி போட முடியும் என்றும் அவர் கூறினார்.

அதேபோல், வன எல்லைகளில் கான்கிரீட் போடும் திட்டத்திற்கு மார்ச் மாதத்திற்கு பிறகு நிதி ஒதுக்கப்படும் என கூறிய அமைச்சர் ராமச்சந்திரன், கான்கிரீட் தடுப்புச்சுவர் போட்டால் யானை, மான் போன்றவை அதை தாண்டி வராது என்றும் கூறினார். இறுதியாக, கோவை மாவட்டம் சிறுமுகையில் புலி இறந்தது குறித்து ஆய்வு நடந்து வருவதாகவும், உடற்கூறு ஆய்வு முடிவுகள் வந்தவுடன் இறப்பிற்கான காரணம் தெரியும் எனவும் அமைச்சர் கூறினார்.