சுவிட்ச்சை போட்ட கல்லூரி மாணவி… பற்றி எரிந்த வாட்டர் ஹீட்டர்… ஒரே மகளை இழந்த பெற்றோர்

 

சுவிட்ச்சை போட்ட கல்லூரி மாணவி… பற்றி எரிந்த வாட்டர் ஹீட்டர்… ஒரே மகளை இழந்த பெற்றோர்

உடலில் மண்எண்ணெய் கொட்டியதால் குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்ற கல்லூரி மாணவி, வாட்டர் ஹீட்டர் சுவிட்ச்சை போட்டுள்ளார். அப்போது, திடீரென பற்றி எரிந்த தீயில் சிக்கி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோவில்மேட்டை சேர்ந்த குணசேகரன் – யுவராணி தம்பதியின் ஒரே மகள் ரெனி ஷெர்சியா (18). குணசேகரன், தோட்ட தொழிலாளர்கள் நல வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆசிரியையான யுவராணியும் ரிட்டயர் ஆகிவிட்டார். இந்த தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. இதனால், ரெனி ஷெர்சியாவை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி 2-ம் ஆண்டு படித்து வந்தார். கொரோனாவால் வீட்டில் இருந்துள்ளார் ரெனி ஷெர்சியா.

சம்பவத்தன்று இரவில் வீட்டில் இருந்த மண்எண்ணெய் கேனை ரெனி ஷெர்சியா எடுக்க முயன்றபோது கேன் தவறி அவர் தலையில் மண்எண்ணெய் கொட்டியது. இதையடுத்து குளிப்பதற்காக குளியலறை சென்றுள்ளார் ஷெர்சியா. அப்போது, வாட்டர் ஹீட்டர் சுவிட்ச்சை போட்டுள்ளார். திடீரென சுவிட்ச்சில் இருந்து தீ பற்றியுள்ளது. ஷெர்சியா மீது ஏற்கெனவே மண்எண்ணெய் கொட்டி இருந்த நிலையில் உடலில் தீ வேகமாக பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடிவந்துள்ளனர்.

தீயில் மகள் எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், தீயை அணைத்தனர். பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மகளை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஷெர்சியா கொண்டு செல்லப்பட்டார். 90 சதவிகித காயங்களுடன் இருந்த ஷெர்சியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கோத்தகிரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.