இறந்துபோன பெற்றோர்… பாட்டி வீட்டில் வளர்ந்த பேத்தி… கல்விக் கட்டணம் செலுத்த முடியாத வேதனையில் கல்லூரி மாணவி தற்கொலை

 

இறந்துபோன பெற்றோர்… பாட்டி வீட்டில் வளர்ந்த பேத்தி… கல்விக் கட்டணம் செலுத்த முடியாத வேதனையில் கல்லூரி மாணவி தற்கொலை

பெற்றோரை இழந்து தவித்த வந்த கல்லூரி மாணவி, தனது பாட்டி வீ்ட்டில் வசித்து வந்தார். கல்விக் கட்டணம் செலுத்த முடியாத வேதனையில் மாணவி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கால் பலர் வேலையை இழந்தும், பலர் பொருளாதாரத்தை இழந்தும் தவித்து வருகின்றனர். இதனிடையே, ஆன்லைன் வகுப்புகளை தொடங்கிவிட்டது தனியார் பள்ளி, கல்லூரிகள். இந்த ஆன்லைன் வகுப்பால் மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். வறுமையில் தவிக்கும் பல பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கி கொடுக்க முடியாமல் தவிர்த்து வருகின்றனர். இதனால் அந்த மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலை இருந்து வருகிறது.

செல்போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத வேதனையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். குடும்ப வறுமையால் பல மாணவ- மாணவிகள் கல்விக் கடடணம் செலுத்த முடியாமல் தவிர்த்து வருகின்றனர். சமீபத்தில் 10ம் வகுப்பு மாணவன், ஆன்லைன் வகுப்பில் ஏற்பட்ட மனஉளைச்சலால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே, கல்விக் கட்டணம் செலுத்த முடியாத வேதனையில் கரூரில் கல்லூரி மாணவி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகே உள்ள புலியூரை சேர்ந்த கிரண்யா (19) என்ற மாணவி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், தனது பாட்டி வீட்டில் தனது அக்காள், அண்ணனுடன் கிரண்யா வசித்து வந்தார். அவரது பாட்டி பூ வியாபாரம் செய்து பேத்தி கிரண்யாவை படிக்க வைத்து வந்தார். இந்த நிலையில் கட்டணம் செலுத்த சொல்லி கல்லூரியில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வறுமையில் தவித்து வந்த குடும்பத்தினரின் நிலையை பார்த்து மாணவி கிரண்யா வேதனை அடைந்தார். இதனால் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் இருந்து வந்தார் கிரண்யா.

இந்த நிலையில், தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார் கிரண்யா. சம்பவத்தன்று இரவு கரூர்- திருச்சி ரயில்வே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தார் கிரண்யா. அப்போது, சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி வேகமாக வந்த சரக்கு ரயில் முன்பு திடீரென பாய்ந்தார் கிரண்யா. இதில், சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கரூர் ரயில்வே காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப வறுமையால் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத வேதனையில் கல்லூரி மாணவி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.