அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: செப். 30-ம் தேதி வரை நீட்டிப்பு

 

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: செப். 30-ம் தேதி வரை நீட்டிப்பு

தமிழகத்தின் கொரோனா பாதிப்பால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. மாணவர்கள் தேர்வை எழுத முடியாத சூழல் நிலவியதால், நடந்து முடிந்த தேர்வுகளை தவிர மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் , இறுதியாண்டு கல்லூரி மாணவர்களின் செமெஸ்டர் தேர்வுகள் மட்டும் ரத்து செய்யப்படவில்லை. இதனிடையே 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகி வெகு நாட்களாகியும் கிடப்பில் இருந்த, மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக தொடங்கியது.

இந்நிலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது செப். 30-ம் தேதி வரை நீட்டித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை செப். 30-ம் தேதியுடன் முடித்து விட்டு, அக்டோபர் முதல் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 87,000 இடங்களில் சுமார் 72,000 இடங்களில் மட்டுமே மாணவர்கள் இதுவரை சேர்ந்துள்ளனர்.