“பணிசெய்ய விடாமல் மிரட்டுகிறார்”- ஊராட்சி துணை தலைவர் மீது, பழங்குடியின பெண் தலைவர் புகார்

 

“பணிசெய்ய விடாமல் மிரட்டுகிறார்”- ஊராட்சி துணை தலைவர் மீது, பழங்குடியின பெண் தலைவர் புகார்

கோவை

தன்னை பணி செய்ய விடாமல் மிரட்டி வரும் ஆதிக்க சாதியை சேர்ந்த ஊராட்சி துணை தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியின பெண் தலைவர் ஒருவர் புகார் அளித்துள்ளார். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவராயபுரம் ஊராட்சியில் 700 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இந்த ஊராட்சியில், சுந்தரி தங்கவேலு என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், ஊராட்சி தலைவரான தன்னையும், குடும்பத்தினரையும் ஆதிக்க சாதியை சார்ந்த துணை தலைவர் கிருஷ்ணன் என்பவர் பணி செய்யவிடாமல் மிரட்டி வருவதாக கூறி, சுந்தரி கிராம மக்களுடன் சென்று, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

“பணிசெய்ய விடாமல் மிரட்டுகிறார்”- ஊராட்சி துணை தலைவர் மீது, பழங்குடியின பெண் தலைவர் புகார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதிக்க சாதியை சேர்ந்த துணை தலைவர் கிருஷ்ணன் சாதிய ரீதியாக செயல்படுவதாகவும், எந்த பணி செய்தாலும் தன்னிடம் கேட்டுத்தான் செய்ய வேண்டும் என மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், அவருடன் சேர்ந்து 2 உறுப்பினர்கள் ஊராட்சியில் நடைபெறும் பணிகளுக்கு பணம் கேட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்தார். எனவே, கிருஷ்ணன் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரி மனு அளித்ததாக அவர் தெரிவித்தார்.