கோவையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தம்… ஏமாற்றத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்…

 

கோவையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தம்… ஏமாற்றத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்…

கோவை

கோவையில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில், மருந்து வாங்க காத்திருந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பீளமேட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் காலை 6 மணி முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்து வாங்கிச்செல்வர்.

இந்த நிலையில், கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் விதமாக தேவைப்படும் தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக மருந்துகளை வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதனையடுத்து, சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் 6 இடங்களில் நடைபெற்று வந்து ரெம்டெசிவிர் மருந்து விற்பனை இன்று முதல் நிறுத்தப்பட்டது.

கோவையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தம்… ஏமாற்றத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்…

இதனையொட்டி, கோவை அரசு மருத்துக் கல்லூரியில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யபடுவதில்லை என கல்லூரி முதல்வர் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதனால் மருந்து வாங்குவதற்காக அதிகாலை 6 மணி முதலே வரிசையில் காத்திருந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் பலர் திரும்பி சென்ற நிலையில், ஒரு தரப்பினர் தங்களுக்கு மருந்து வழங்க வலியுறுத்த, திடீரென சாலை மறியல் போராட்டத்தில ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த பீளமேடு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து கலைந்துபோக செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.