கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம்!

 

கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம்!

கோவை

கோவை அரசு மருத்துவமனையில் கூடுதலாக செவிலியர்களை நியமிக்க வலிறுத்தி, இன்று காலை செவிலியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு மருத்துவமனையில் கோவை மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா சிறப்பு பிரிவில், ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா மற்றும் பொது சிகிச்சை பிரிவுகளில் போதிய அளவு செவிலியர்கள் இல்லாததால் பணிச்சுமை அதிகரித்துள்ளதாக செவிலியர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் கூடுதலாக செவிலியர்களை உடடினயாக நியமனம் செய்யக் கோரி இன்று 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீரென பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம்!

அப்போது, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 300 செவிலியர்களே பணியில் ஈடுபட்டு வருவதாகவும், இதேபோல் கொரோனா சிகிச்சை பிரிவில் 100 பேருக்கு ஒரு செவிலியர் என்ற விகிதத்தில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்தனர். இதனால் செவிலியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து, மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர்கள், இதனால் நோயாளிகளும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் கூறினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மருத்துவமனை முதல்வர் நிர்மலா பேச்சுவார்த்தையில் ஈடுட்டதை தொடர்ந்து அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர். செவிலியர்கள் போராட்டம் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.