கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை எரியூட்ட ரூ.22 ஆயிரம் லஞ்சம்… சுகாதார ஆய்வாளர் டிஸ்மிஸ்..

 

கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை எரியூட்ட ரூ.22 ஆயிரம் லஞ்சம்… சுகாதார ஆய்வாளர் டிஸ்மிஸ்..

கோவை

கோவையில் கொரோனாவால் இறந்தவரின் உடலை எரியூட்ட ரூ.22 ஆயிரம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில், சுகாதார ஆய்வாளர் திருப்பதி என்பரை பணிநீக்கம் செய்து, மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.

கோவை சாயிபாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த நோயாளி ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் திருப்பதி உடலை துடியலுார் மயானத்தில் எரியூட்ட பரிந்துரை வழங்கினார்.

அப்போது, சடலத்தை ‘பேக்கிங்’ செய்து, ஆம்புலன்ஸில் எடுத்துச்சென்று, மயானத்தில் எரியூட்ட ரூ.25 ஆயிரமும், இறுதிச்சடங்குகள் செய்ய கூடுதலாக ரூ.10 ஆயிரமும் தர வேண்டும் என நோயாளியின் உறவினர்களிடம் பேரம் பேசியுளளார். இறுதியாக, ரூ.22 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு, சடலத்தை ஒப்படைத்து உள்ளனர்.

கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை எரியூட்ட ரூ.22 ஆயிரம் லஞ்சம்… சுகாதார ஆய்வாளர் டிஸ்மிஸ்..

இந்த விவகாரம் குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்க, துடியலுார் போலீசாருக்கு, வடக்கு மண்டல உதவி ஆணையர் மகேஷ் கனகராஜ் உத்தரவிட்டார். இதனையடுத்து, சடலத்தை எடுத்துச் சென்ற தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, சுகாதார ஆய்வாளர் திருப்பதி, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை ஊழியர்களிடம் போலீசார் விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர்.

இதனிடையே, மாநகராட்சியில் தற்காலிக சுகாதார ஆய்வாளராகவும், அரசு மருத்துவமனை சவக்கிடங்கு பொறுப்பாளராகவும் பணிபுரிந்து வந்த திருப்பதியை, பணிநீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். மேலும், தனியார் ஆம்புலன்ஸ்கள் அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட கூடுதலாக வசூலித்தால், கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.