கமல் தலைமையில் கூட்டணி – யாரெல்லாம் சேரக்கூடும்?

 

கமல் தலைமையில் கூட்டணி – யாரெல்லாம் சேரக்கூடும்?

திமுக – அதிமுக எனும் இரு துருவ அரசியல் கூட்டணிகளே கடந்த 40 ஆண்டுகளாக மோதிக்கொண்டிருக்கின்றன. மற்றொரு புதிய சக்தியாக, வலிமை வாய்ந்த கூட்டணியாக இதுவரை அமைய வில்லை. சென்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி எனும் பெயரில் ஒரு முயற்சி நடந்தது. பெரிய அளவுக்கு வாக்குகளைப் பெற்று, கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் கருதப்பட்டது. ஆனால், ஒரு தொகுதியில்கூட அது வெல்ல வில்லை என்பதே யதார்த்தம்.

வரும் சட்டமன்ற தேர்தலில் இருந்து ரஜினியும் ஒதுங்கிக்கொண்டதால் மீண்டும் இரு துருவ கூட்டணியே மோதவிருக்கிறது. ஆனால், கமல் தன் தலைமையில் ஒரு கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம். அதற்கான அறிவிப்பை ஜனவரியில் வெளியிடுவோம் என்று கூறியிருக்கிறார். ஒருவேளை அப்படி உருவாகும் கூட்டணியில் யாரெல்லாம் இடம்பெறக்கூடும் என்பதை யூகிக்கலாம்.

கமல் தலைமையில் கூட்டணி – யாரெல்லாம் சேரக்கூடும்?

கமல்ஹாசனுடன் கூட்டணி சேரலாம் என்றதுமே முதலில் அடிபடுவது ஓவைசி பெயர்தான். பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவின் B டீம் என்று பெயர் இடப்பட்டது இக்கட்சிக்கு. அதாவது பாஜகவுக்கு எதிரான கூட்டணிக்குச் செல்ல வேண்டிய வாக்குகளைச் சிதறடிப்பது. இங்கும் திமுகவுக்குச் செல்லும் சிறுபான்மை ஓட்டுகளை கமலுடன் சேர்ந்து சிதறடிக்க முயல்வார். கமல் ஒத்துக்கொண்டால் கூட்டணி நிச்சயம்.

ரஜினி அரசியலுக்கு வருவதாகச் சொன்னபோது எதிர்த்த சீமான், கமல் வருகையின்போது நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அதனால், இரு தரப்பிலும் முதலமைச்சர் வேட்பாளர் எனும் பெரிய விஷயத்தை ஒதுக்கி வைத்து பேச்சு வார்த்தை நடத்தினால் கூட்டணிக்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்து வேலையைத் தொடங்கி விட்ட சீமான் கட்சியினர் இதை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே.

கமல் தலைமையில் கூட்டணி – யாரெல்லாம் சேரக்கூடும்?

அதிமுக – திமுக இரு தரப்பிலும் சரத்குமார் தொகுதிகள் பெற பெரு முயற்சி எடுப்பார். ஆனால், தற்போது இரு கூட்டணியிலும் அதிக கட்சிகள் இருப்பதால் தொகுதிகள் ஒதுக்க தயங்கும் அல்லது மறுத்து விடும். அப்படியொரு நிலை வந்தால் சரத்குமார் கட்சி கமல்ஹாசனுடன் கரம்கோர்க்கும்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலோடு கமல்ஹாசன் நல்ல நெருக்கம். அதனால், தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சியோடு கூட்டணி வைத்துக்கொள்ள முடிவு செய்யலாம். இது தமிழ்நாட்டில் வெற்றிக்கு உதவுமா என்பது சந்தேகமே… ஆனால், டெல்லி வட்டாரத்தில் ஏதெனும் கமல் சாதித்துக்கொள்ள உதவக்கூடும்.

கமல் தலைமையில் கூட்டணி – யாரெல்லாம் சேரக்கூடும்?

மம்தா பானர்ஜியின் திரிணாமல் காங்கிரஸ் போன்ற வடமாநிலக் கட்சிகள் பல தமிழ்நாட்டில் கால் பதிக்க நினைக்கின்றன. அவற்றோடு கமல் கூட்டணி வைக்கலாம். நேரடி பலன் இல்லையெனினும், கெஜ்ரிவால், மம்தா என தேசிய தலைவர்களோடு மேடையைப் பகிர்கையில் அது இந்திய அளவிலான செய்தியாக மாறும். அதற்காக இந்த முயற்சியை எடுக்கலாம். மேலும், அந்தக் கட்சியின் ஏதேனும் ஒன்றின் வழியாக மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கமல் அல்லது யாரேனும் ஒருவர் பாராளுமன்றம் செல்ல வாய்ப்பு ஏற்படலாம்.

கமல் தலைமையில் கூட்டணி – யாரெல்லாம் சேரக்கூடும்?

இப்படித்தான் கமல் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறது. தேமுதிக, பாஜக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூட்டணியிருந்து பிரிந்து வந்து கமலுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு மிக மிகக் குறைவே.