ஒடிசாவை தொடர்ந்து மத்திய பிரதேசமும் அறிவிப்பு… ஜே.இ.இ. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பஸ் பயணம்

 

ஒடிசாவை தொடர்ந்து மத்திய பிரதேசமும் அறிவிப்பு… ஜே.இ.இ. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பஸ் பயணம்

ஒடிசாவை தொடர்ந்து மத்திய பிரதேச அரசும், ஜே.இ.இ. மற்றும் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல இலவச பஸ் பயண வசதியை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், கூட்டு நுழைவு தேர்வு (ஜே.இ.இ.) (மெயின்) தேர்வு செப்டம்பர் 1ம் தேதி (நாளை) முதல் 6ம் தேதி வரை நடைபெறும் என்றும், நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதி அன்றும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அறிவித்தது. மேலும், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து கூறுகையில், மாணவர்களின் பாதுகாப்பும், எதிர்காலமும் முதன்மையானது. அதனை கருத்தில் கொண்டு தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஒடிசாவை தொடர்ந்து மத்திய பிரதேசமும் அறிவிப்பு… ஜே.இ.இ. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பஸ் பயணம்
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேசத்தில் ஜே.இ.இ. மற்றும் நீட் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு வசதியாக இலவச பஸ் பயணத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நுழைவு தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு இலவச பஸ்சில் பயணிக்கலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் டிவிட்டரில், ஒன்றியம் அல்லது மாவட்ட தலைநகரங்களிலிருந்து மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல இலவச பயண ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த வசதியை பெற விரும்பும் மாணவர்கள் 181 என்ற எண்ணுக்கு அழைத்தல் அல்லது https/mapit.gov.in./covid-19 என்ற வலைதளத்தில் இன்றைக்குள் (ஆகஸ்ட் 31) பதிவு செய்ய வேண்டும் என பதிவு செய்து இருந்தார்.

ஒடிசாவை தொடர்ந்து மத்திய பிரதேசமும் அறிவிப்பு… ஜே.இ.இ. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பஸ் பயணம்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

கடந்த சில தினங்களுக்கு முன் ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு, ஜே.இ.இ. மற்றும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பஸ் பயணம் மற்றும் தங்குமிடம் வசதி செய்து கொடுக்கப்படும் என அறிவித்தது. தற்போது மத்திய பிரதேச அரசும் நுழைவு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பஸ் பயண வசதியை அறிவித்துள்ளது. இது போன்ற அறிவிப்புகளை மற்ற மாநிலங்களும் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.