“அண்ணா, எம்.ஜி.ஆர் போன்று ஆளுமைமிக்க தலைவர் நான் அல்ல” – முதல்வர் பழனிசாமி பேச்சு!

 

“அண்ணா, எம்.ஜி.ஆர் போன்று ஆளுமைமிக்க தலைவர் நான் அல்ல” – முதல்வர் பழனிசாமி பேச்சு!

அதிமுக செயற்குழு- பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுமைமிக்க தலைவர் நான் இல்லை என்று தெரிவித்தார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இன்று காலை சென்னை வானகரத்தில் இருக்கும் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடியது. காலை 8.50 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தாமதமாக 11 மணிக்கு கூட்டம் கூடியது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தலைமையில் நடைபெறும் அந்த நிகழ்ச்சியில், அதிமுகவின் மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என பலர் பங்கேற்றுள்ளனர்.

“அண்ணா, எம்.ஜி.ஆர் போன்று ஆளுமைமிக்க தலைவர் நான் அல்ல” – முதல்வர் பழனிசாமி பேச்சு!

அக்கூட்டத்தில் அரசுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தும், எதிர்க்கட்சிக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மொத்தமாக அக்கூட்டத்தில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவிருக்கிறது. இந்த நிலையில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, “அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் நான் அல்ல. ஆனால், கட்சி கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறேன். 4 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை கொடுத்ததாக நான் நம்புகிறேன். சட்ட மன்ற தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றினால் தான் அதிமுக வெற்றி பெற முடியும். திட்டம் போட்டு சிறப்பாக செயல்படுத்தினால் அதிமுக வெற்றி பெறுவது உறுதி” என்று பேசினார்.

தொடர்ந்து, ” ஆளுநரிடம் ஸ்டாலின் கொடுத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி வருகிறார் ஸ்டாலின். விவாதத்திற்கு அழைத்தால் எங்கேயோ உள்ள வழக்குகளை திரும்பப் பெறக் கூறுகிறார்” என்று குற்றஞ்சாட்டினார். மேலும், ” ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதால் சிந்தாமல் சிதறாமல் வாக்குகளை பெற வேண்டும். வெளிநாடுவாழ் இந்தியர்களின் வாக்குகளும் மிக முக்கியம். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவிக்கும்” என்றும் கூறினார்.