புயல் பாதிப்பு : அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!

 

புயல் பாதிப்பு : அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!

நிவர் புயலைத் தொடர்ந்து தெற்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயல், நேற்று காலையில் இருந்து நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டிருக்கிறது. ராமநாதபுரத்தில் இருந்து 40 கி.மீ தொலைவில் கடந்த 30 மணி நேரமாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பதால், கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

புயல் பாதிப்பு : அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!

விளைநிலங்கள் நாசமடைந்ததோடு, மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர். சென்னையிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. புரெவி புயலால் இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பீதியை அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்த நிலையில் புயல், மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மக்களை காப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் நிவாரண உதவிகள் குறித்து அக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.