சென்னை : இந்தி திணிப்புக்கு எதிராக போராட உறுதியாக உள்ளோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று 73ஆவது சுதந்திர தினம் உற்சாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலை 9 மணிக்கு சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக்கொடியை ஏற்றினார். மூன்றாவது முறையாகத் தேசியக் கொடியை முதல்வர் பழனிசாமி ஏற்றியுள்ளார். இதனால் கோட்டை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து போலீசாரின் அணிவகுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 'தமிழக மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். இரு மொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்கக் கூடாது. இந்தி திணிப்புக்கு எதிராக போராட உறுதியாக உள்ளோம்' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 'கங்கை சீரமைப்பு திட்டம் போல் காவிரி ஆற்றை சீரமைக்க நடந்தாய் வாழி காவேரி என்ற திட்டத்தினை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது. தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளதைப் போல் நீர் மிகை மாநிலமாக விரைவில் உருவாகும் என்று கூறிய அவர் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் 16 ஆயிரமாக உயர்த்தப்படும்' என்றும் அறிவித்தார்.