ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை – முதல்வர் பழனிசாமி

 

ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை – முதல்வர் பழனிசாமி

கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திமுகவின் அமைப்புசெயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், நீதிபதிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆர்.எஸ்.பாரதி மீது, ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் புகார் அளித்தார்.

ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை – முதல்வர் பழனிசாமி

அந்த புகாரின் பேரில் இன்று காலை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், நீதிபதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினார்.

ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது பழிவாங்கல் நடவடிக்கை என்று திமுகவினர் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டதற்கும் தமிழக அரசுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பட்டியலினத்தவர்களை விமர்சிக்கும் விதமாக பேசியதால் தான் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் ஆர்.எஸ். பாரதி இழிவாக பேசிய போதே ஸ்டாலின் அதனை கண்டித்திருக்க வேண்டும் என்றும் இதற்கு அரசு தான் காரணம் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார். மேலும், அரசின் இ-டெண்டரில் முறைகேடு நடப்பதாக, விஞ்ஞானி போல விளம்பரத்துக்காக ஆர்.எஸ்.பாரதி கூறுவது பொய் என்றும் தெரிவித்துள்ளார்.