ஆக.11ல் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம்.. முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல்..
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் வருகின்ற ஆகஸ்ட் 11-ல் கூட உள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கம் கொண்டுவந்துள்ள, முக்கிய நடிகர்களின் படத்திற்கு கட்டுப்பாடுகள், படப்பிடிப்பு நிறுத்தம் உள்ளிட்டவை தொடர்பாக இந்தக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது!
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிதியை தவறுதலாக பயன்படுத்தியதற்காக நடிகர் விஷால் படத்திற்கு கட்டுப்பாடு, பல தயாரிப்பாளர்கள் இடம் முன்பணம் பெற்று படங்களை நடித்துக் கொடுக்காமல் காலதாமதம் செய்வதால் நடிகர் தனுஷ் படத்திற்கு கட்டுப்பாடு, புதிய படங்களின் பூஜை மற்றும் படப்பிடிப்பு நிறுத்துவது, நடிகர்களின் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் புதிய விதிகளை மாற்றி அமைப்பது தொடர்பாக அடுத்தடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி முடிவுகளை வெளியிட்டு வந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தயாரிப்பாளர் சங்கத்தின் அறிக்கை வெளியான அன்றைய தினமே நடிகர் சங்கத்தினர் அவசர கூட்டத்தை கூட்டி ஆலோசித்து கடும் கண்டனங்களையும் தெரிவித்திருந்தனர். அதற்கு செவி கொடுக்காத தயாரிப்பாளர்கள் சங்கம் மீண்டும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தைக் கூட்டி தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிலைபாடு குறித்தும், நடிகர்கள் தனுஷ், சிம்பு, கமல், விஷால், ஆகியோர் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகள் குறித்தும், மேலும் சினிமா ஸ்டிரைக் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆலோசிப்பதற்காக தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட உள்ளது. அதன் அடிப்படையில் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி சென்னை தியாகராயர் நகரில் உள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு கோலிவுட் வட்டாரத்தில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தயாரிப்பாளர்கள் சங்கம் -தென்னிந்திய நடிகர் சங்கம் இணைந்து பேச்சு வார்த்தையின் மூலம் சமூகமாக இதற்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்படாவிட்டால் சினிமா ஸ்ட்ரைக் நடைபெறுமா என்பதும் இந்த செயற்குழு கூட்டத்திற்கு பின் தெரியவரும் என கூறப்படுகிறது.