100 நாளாவது வேண்டும்… திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி!

 

100 நாளாவது வேண்டும்… திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி!

புதிய திரைப்படங்கள் அமேசான், நெட்ஃபிளெக்சில் உடனே வெளியாவதை தடுக்க வேண்டும், குறைந்தது 100 நாட்களுக்குப் பிறகுதான் அனுமதிக்க வேண்டும் என்று திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், உச்ச நடிகர்கள் படம் தோல்வியடைந்தால் அதற்கு பொறுப்பேற்று தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும்.
புதிய திரைப்படங்கள் அமேசான் ப்ரைம், நெட்ஃபிளெக்ஸ் போன்ற ஆப்களில் உடனே வெளியாவதை தடை செய்ய வேண்டும். குறைந்தது படம் வெளியாகி 100 நாட்கள் ஆகியிருந்தால் மட்டுமே இந்த ஆப்களில் வெளியிட அனுமதிக்க வேண்டும். இதை ஏற்காத தயாரிப்பாளர்கள் படத்தைத் திரையிடுவது இல்லை.

ott

திரையரங்குகள் மீதான எட்டு சதவிகித வரியை பிப்ரவரி மாதத்துக்குள் திரும்பப் பெற வேண்டும். இல்லை என்றால் மார்ச் 1ம் தேதி முதல் திரையஙரங்குகளை மூடி போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் இது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் கூறுகையில், “முன்பு எல்லாம் படம் 100 நாள், 200 நாள் ஓடும். இப்போது 10, 20 நாள் ஓடுவதே பெரிய சவாலாக உள்ளது. புதுப்புது படங்களை எல்லாம் ஆப்களில் வெளியிட்டுவிடுகிறார்கள். தீபாவளிக்கு வந்த படங்கள் இப்படி வெளியானதால், திரையரங்குக்கு வரும் கூட்டம் குறைந்துவிட்டது. இப்படியே சென்றால் திரையரங்குகளை நடத்துவதே கேள்விக் குறியாகிவிடும். இதை தடுத்து நிறுத்த, திரையரங்குகள் மீதான வரியைக் குறைத்து இந்த தொழிலைக் காப்பாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றனர்.